2 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கிகள் வரவழைப்பு
பந்தலூர் அருகே ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் 2 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. மேலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழக-கேரள எல்லையொட்டி உள்ள வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புகுந்து தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இரும்புபாலம், இண்கோநகர், இந்திராநகர், ஏலமன்னா, சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் 1, படச்சேரி, திருவள்ளுவர்நகர், எலியாஸ்கடை, குறிஞ்சிநகர் ஆகிய பகுதிகளில் புகுந்து விவசாய பயிர்களான வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை மிதித்தும் உடைத்தும் நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பந்தலூர் அருகே இரும்புபாலத்தில் 2 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களையும் மாணவ-மாணவிகளையும் துரத்தியது. மேலும் வீடுகளையும் சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைநது போனார்கள். தையடுத்து இந்த 2 காட்டு யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி திடீரென பந்தலூர்-கோழிக்கோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் அதிகாரிகள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள், கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்கார் உத்தரவுபடி தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வனவர்கள் பாலகிருஷ்ணன், கிருஷ்ணகுமார் மற்றும் வனத்துறையினர் வேட்டை தடுப்புகாவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் அட்டகாச யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட மதுமலையில் இருந்து கும்கி யானைகளான பொம்மன், ஸ்ரீனிவாசன் வரவழைக்கப்பட்டு உள்ளது. இந்த யானைகள் மூலம் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன்காரணமாக பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளார்கள்.