போதை மாத்திரை விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது


போதை மாத்திரை விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது
x

திருச்சி கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி

ரகசிய தகவல்

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் விற்கப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் காமினி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மாநகரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அவ்வப்போது போதை ஊசி, மருந்து விற்பவர்களை கைது செய்வதுடன், அவர்களை குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைத்து வருகிறார்கள். இருப்பினும் போதை மருந்து விற்பனை குறைந்தபாடில்லை.இந்தநிலையில் திருச்சி கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இ.பி.ரோடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே உள்ள பாழடைந்த இடத்தில் 2 பேர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நீரில் கலந்து விற்பனை

இதையடுத்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு 2 வாலிபர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 'நைட்ரோசன் 10' என்ற 300 போதை மாத்திரைகள், ஒரு ஷலைன் பாட்டில், 5 ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்த ரெங்கராஜ் மகன் யோகானந்தம் (வயது 23), அரிச்சந்திரன் மகன் தர்மதுரை (19) என்பது தெரியவந்தது. மேலும், மனநோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரையை போதைக்காக வேதி உப்புநீரில் (ஷலைன்) கலந்து அதை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்டால் போதை இருக்கும் என்று கூறி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

இந்த மாத்திரை மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. இதனால் இந்த மாத்திரை இவர்களுக்கு எப்படி கிடைத்தது? எந்த மருந்து கடையில் வாங்கினார்கள்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் திருச்சி 1-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story