தடைசெய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

விழுப்புரத்தில் தடைசெய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி சுகாதாரத்துறையினர் கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்
விழுப்புரம்
பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை
தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சிலர் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் சாா்பில் சந்தேக இடங்களில் திடீர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
2 டன் பறிமுதல்
விழுப்புரம் நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சிலர் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நகராட்சி சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான ஊழியர்கள் சந்தேகப்படும் படியான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் விழுப்புரம் பாகர்ஷாவீதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து எச்சரித்தனர்.






