பூந்தமல்லி அருகே 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது


பூந்தமல்லி அருகே 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது
x

பூந்தமல்லி அருகே மினி வேனில் கடத்தப்பட்ட 2½ டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

திருவள்ளூர்

ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து திருவள்ளூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை பூந்தமல்லி அடுத்த கோளப்பஞ்சேரி சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 2 ஆயிரத்து 700 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் வேனை ஓட்டி வந்தவர் ஆவடி சிரஞ்சீவி நகர் கார்த்திக் (வயது 36) என்பதும், ரேஷன் அரிசியை கள்ளக்குறிச்சியில் உள்ள கோழி பண்ணைகளுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து ரேஷன் அரிசியையும், வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

டிரைவர் கார்த்திக் ரேஷன் அரிசியை திருநின்றவூர், பிரகாஷ் நகர் ரேஷன் கடையில் இருந்து ரேஷன் கடை விற்பனையாளர் சரவணன் (வயது 34) அனுப்பி வைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து டிரைவர் கார்த்திக் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story