தீவட்டிப்பட்டி அருகே, போலீசார் கைப்பற்றிய 2 டன் குட்கா பொருட்கள் தீ வைத்து அழிப்பு
தீவட்டிப்பட்டி அருகே போலீசார் கைப்பற்றிய 2 டன் குட்கா பொருட்கள் தீ வைத்து அழிக்கப்பட்டன.
ஓமலூர்,
தீவட்டிப்பட்டி அருகே கடந்தாண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவட்டிப்பட்டி போலீசார் தின்னப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லாரியின் அடியில் ரகசிய அறை அமைத்து உள்ளே மூட்டை, மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் உள்பட குட்கா பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான தர்மபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியை சேர்ந்த மாதையன் மகன் ராஜா என்பவரை கைது செய்தனர். மேலும் ரூ.5 லட்சம் மதிப்பிலான 2 டன் குட்கா பொருட்கள் மற்றும் குட்கா கடத்த பயன்படுத்திய ரூ.15 லட்சம் மதிப்பிலான லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தீ வைத்து அழிப்பு
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை அழித்து அதை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என ஓமலூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று தளவாய்பட்டி ஏரியில் 2 டன் போதைப்பாக்குகள் உள்ளிட்ட குட்கா பொருட்களை தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் தீ வைத்து எரித்து அழித்தனர். இதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த போலீசார், அந்த பதிவுகளை கோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தனர்.