கறம்பக்குடியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கறம்பக்குடியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அரிசியை பதுக்கியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரேஷன் அரிசி பதுக்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கறம்பக்குடி பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கறம்பக்குடி, புளியஞ்சோலை காலனியில் ஒரு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது.
வலைவீச்சு
போலீசார் விசாரணையில் ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வடிவேல் முருகன் (வயது 53) என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.