உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவுக்கு ஜீப்பில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது


உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவுக்கு ஜீப்பில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 22 July 2023 9:00 PM GMT (Updated: 23 July 2023 11:48 AM GMT)

உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவுக்கு ஜீப்பில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஜீப் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தேனி

உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவுக்கு ஜீப்பில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஜீப் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

அதிகாரிகள் ரோந்து

தேனி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் கேரள மாநிலம் அமைந்துள்ளது. இதனால் இங்கு ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் இலவச அரிசி, ரேஷன் கடைகளில் முறைகேடாக பெறப்படும் ரேஷன் அரிசியை மர்மகும்பல் கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய மலைப்பாதைகள் வழியாக கேரளாவுக்கு கடத்துவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

இதையடுத்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜீப்பில் கடத்தல்

இந்தநிலையில் உத்தமபாளையத்தில் இருந்து கேரளாவுக்கு ஜீப்பில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆர்.டி.ஓ. தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி, உத்தமபாளையம் போலீசார் நேற்று கம்பம்மெட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை மறித்தனர். அதில், மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது. அதாவது 40 கிலோ எடை கொண்ட 50 மூட்டை ரேஷன் அரிசி (2 டன்) இருந்தது.

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

இதையடுத்து ஜீப்பை ஓட்டிவந்த நபரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், அவர் உத்தமபாளையத்தை சேர்ந்த ஜீப் டிரைவரான சுந்தர் (வயது 47) என்பதும், கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்திச்சென்றதும் தெரியவந்தது.

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஜீப், 2 டன் ரேஷன் அரிசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story