பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்


பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்
x
தினத்தந்தி 18 March 2023 7:54 PM GMT (Updated: 18 March 2023 7:56 PM GMT)

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் "புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-27" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் 5,420 கற்போர்கள் கண்டறியப்பட்டு 273 மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு வட்டார அளவில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் வாசிப்பை நேசி, வாழ்க்கையை சுவாசி என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர் போட்டி சார்ந்த தெளிவுரை வழங்கினார். மேலும் பெரம்பலூர் அரசு கலை கல்லூரி பேராசிரியர் காசி விஸ்வநாதன், சேதுராமன், ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

போட்டியில் முதல் இடத்தை துங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் கோதண்டராமனும், 2-ம் இடத்தை எழுமூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் ஸ்டாலினும், 3-ம் இடத்தை பாடாலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் விநாயகமூர்த்தியும் பிடித்தனர். அவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை புதிய பாரத எழுத்தறிவு திட்ட மாவட்ட ஒருஙகிணைப்பாளர் மகாதேவன், பாரதிதாசன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story