கம்பி கட்டும் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
தியாகதுருகம் அருகே கம்பி கட்டும் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்
தியாகதுருகம்
அரசு திட்ட வீடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேதுப்பிள்ளை(வயது 71). விவசாயியான இவர் அதே பகுதியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டி வருகிறார்.
தப்போது வீட்டின் மேற்கூரை அமைப்பதற்காக கம்பி கட்டும் வேலை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சப்பாணி மகன் கிருஷ்ணன்(37), பச்சை மகன் நாகராஜன்(52) ஆகியோர் கம்பி கட்டும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
மின்சாரம் தாக்கி பலி
அப்போது கட்டுவதற்காக எடுத்த கம்பி ஒன்று அவர்களுக்கு மேலே சென்ற உயரழுத்த மின்கம்பியில் பட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் கிருஷ்ணன், நாகராஜன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பலியான இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பி கட்டும் பணியின்போது 2 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.