புதிய வீடு கட்டும் பணியில் சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி
ராமநாதபுரத்தில் புதிய வீடு கட்டும் பணியின்போது மாடிப்படியை தாங்கும் சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
ராமநாதபுரத்தில் புதிய வீடு கட்டும் பணியின்போது மாடிப்படியை தாங்கும் சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
புதிய வீடு கட்டும் பணி
ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயதுரை. பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரமணீசுவரி. அரசு மருத்துவ கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் ராமநாதபுரம் சேதுபதிநகர் 4-வது தெருவில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர். இங்கு திருப்புல்லாணி பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மேஸ்திரியாக இருந்து பணியாட்களை நியமித்து புதிய வீட்டு கட்டுமான வேலைகளை கவனித்து வந்தார்.
இந்த வீட்டின் உள்பகுதியில் மாடிக்கு செல்வதற்காக சுற்றுவடிவ படிக்கட்டுகள் கட்டப்பட்டு உள்ளன. அதன் அடிப்பகுதியில் தற்காலிக கான்கிரீட் சுவர் கட்டப்பட்டு தாங்கு கட்டைகள் பொருத்தப்பட்டு இருந்தன.
சுவர் சரிந்து விழுந்தது
இந்தநிலையில் நேற்று படிக்கட்டுகளின் அடியில் பொருத்தப்பட்டுள்ள தற்காலிக கான்கிரீட் சுவரை தாங்கிய கட்டைகளை நீக்கி அகற்றும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக படிக்கட்டுகளை தாங்கிய சுவர் இடிந்து மளமளவென சரிந்தது.
இதில் கீழே நின்று பணியில் ஈடுபட்டு இருந்த ராமநாதபுரம் அருகே உள்ள வன்னிக்குடியை சேர்ந்த சவுந்திரபாண்டியன் (வயது 40) மற்றும் அச்சுந்தன்வயலை சேர்ந்த காலனி தெருவை சேர்ந்த மாதவன்(57) ஆகியோர் மீது கட்டிட இடிபாடுகள் மொத்தமாக விழுந்து அமுக்கின..
2 பேர் பலி
இடிபாடுகளுக்குள் இருவரும் சிக்கியதை அறிந்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற தொழிலாளர்கள் ஓடிவந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்றனர். 2 பேரின் உடல்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சவுந்திரபாண்டியனுக்கு சரசுவதி என்ற மனைவியும், யஸ்விதா(4) என்ற மகளும் உள்ளனர். மாதவனுக்கு திருமணம் ஆகவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.