அனுமதியின்றி மரங்களை வெட்டினால் 2 ஆண்டு சிறை தண்டனை


அனுமதியின்றி மரங்களை வெட்டினால் 2 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பட்டா நிலங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நீலகிரி

ஊட்டி,

பட்டா நிலங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

முன் அனுமதி

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மரங்கள் வெட்டுவதை முறைப்படுத்தவும், தமிழக அரசால் தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டம், தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. பட்டா நிலங்களில் முதிர்ச்சியடைந்து உள்ள மரங்களை வெட்ட, மேற்கண்ட சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட மாவட்ட கலெக்டரின் தலைமையிலான மாவட்ட குழுவிடம் கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்.

மரங்களை வெட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்களை http://www.nilgiristreecuttingpermissions.org/ என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கும் நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. இந்த இணையதளம் மாவட்ட நிர்வாகத்தால் தற்போது முழுமையாக மேம்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தில் பொதுமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் நிலத்தில் உள்ள மரங்கள், குழு உறுப்பினர்களால் தணிக்கை செய்யப்படுகிறது.

2 ஆண்டு சிறை

அவர்களின் பரிந்துரைகளும் இணைய வழியில் சமர்ப்பிக்கப்பட்டு, மாவட்ட குழுவின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன. இறுதியாக மரங்கள் வெட்ட அனுமதி வழங்கும் உத்தரவும் மேற்கண்ட இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த உத்தரவினை விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த புதிய நடைமுறை மூலம், விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் முதல், மரங்களை வெட்ட ஆணை வழங்கப்படும் வரை அனைத்து நிலைகளும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் விண்ணப்பம் சமர்ப்பித்த நாளில் இருந்து 1 மாத காலத்திற்குள் மரங்கள் வெட்ட அனுமதி வழங்கப்படும். எனவே, மேற்கண்ட நடைமுறையை பயன்படுத்தி பயனடையலாம். மேலும் மாவட்ட குழுவிடம் உரிய அனுமதி பெறாமல் பட்டா நிலத்தில் மரங்கள் வெட்டுவது சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றத்திற்காக சட்டத்தின் படி 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


1 More update

Next Story