ஊராட்சி உதவியாளருக்கு 2 ஆண்டு சிறை
ஊராட்சி உதவியாளருக்கு 2 ஆண்டு சிறை
கோவை
கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சியில் உதவியாளராக பணியாற்றியவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந் தேதி குப்பைகளை சுத்தம் செய்யும் பணிகளுக்கு பணம் வழங்க சக்திவேல் என்பவரிடம் ரூ.500 லஞ்சம் கேட்டு உள்ளார். இது குறித்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பாலசுப்பிரமணியன் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் இது தொடர்பாக கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அரசு தரப்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இந்துலதா தீர்ப்பு கூறினார்.