பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை
அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணிற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அங்கன்வாடியில்...
திருவண்ணாமலை தாலுகா இனாம்கரியந்தல் கிராமத்தை சேர்ந்த குண்டப்பா என்பவரின் மகள் கவுதமி. இவருக்கு, அங்கன்வாடி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முனியந்தல் சத்திரம் கிராமத்தை சேர்ந்த நாகமுத்து என்பவரின் மனைவி தேவகாந்தா (வயது 60) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது.
அப்போது தேவகாந்தா மேட்டூர் அல்லது கொளத்தூர் கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் ஏதேனும் ஒன்றில் அங்கன்வாடி பணியாளராக நியமனம் செய்து பணி ஆணை வாங்கி தருவதாக கவுதமியிடம் ஆசைவார்த்தை கூறி கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் பெற்று உள்ளார். பின்னர் பல மாதங்களாகியும் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
2 ஆண்டு சிறை தண்டனை
இதையடுத்து கவுதமி அவரிடம் பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்து உள்ளார்.
இதுகுறித்து கவுதமி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி தேவகாந்தாவை கைது செய்தனர். இதுதொடர்பான சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-1-ல் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கவியரசன், அங்கன்வாடியில் வேலை வாங்கித் வருவதாக பணம் மோசடியில் ஈடுபட்ட தேவகாந்தாவிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.