செல்போனை பறித்த 2 வாலிபர்கள் கைது
ஆவூர் அருகே செல்போனை பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலுப்பூர் தாலுகா மகுதுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் அந்தோணிராஜ் (வயது 28). இவர் ஆவூரில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அந்தோணிராஜ் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துக் கொண்டு ஆவூரில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் இலுப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 9 மணியளவில் தெற்கு புதுப்பட்டி அருகே சாலையோரம் நின்று கொண்டு போன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அந்தோணிராஜின் செல்போனை பறித்துக் கொண்டு ஓட முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தோணிராஜ் திருடன் திருடன் என்று கூச்சல் போட்டுள்ளார். இதை பார்த்த அருகில் வீட்டில் இருந்தவர்கள் விரைந்து சென்று இருவரையும் பிடிக்க முயன்ற போது ஒருவர் இருட்டில் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட ஒருவரை மாத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது பிடிபட்ட நபர் மணிகண்டம் ஒன்றியம், மட்டபாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்பரசன் மகன் அபிஷேக் (20) என்பதும், தப்பி ஓடியவர் திருச்சி மாவட்டம், துறையூர் சோபனபுரத்தை சேர்ந்த உல்லாஸ் என்பவரது மகன் சூர்யா (22) என்பதும் தெரிய வந்தது. பின்னர் பிடிபட்ட அபிஷேக் மூலம் தப்பி ஓடிய சூர்யாவை போலீசார் வரவழைத்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.