முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் கொலையில் 2 வாலிபர்கள் அதிரடி கைது


முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் கொலையில் 2 வாலிபர்கள் அதிரடி கைது
x

நெல்லையில் முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் கொலையில் 2 வாலிபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லையில் முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் கொலையில் 2 வாலிபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

அ.தி.மு.க. பிரமுகர் கொலை

நெல்லையை அடுத்த பேட்டை கருங்காடு ரோடு மயிலப்பபுரத்தைச் சேர்ந்தவர் பிச்சைராஜ் (வயது 52). அ.தி.மு.க. பிரமுகர். பேட்டை ரூரல் முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவரான இவர் பேட்டை எம்.ஜி.ஆர். நகரில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பிச்சைராஜ் பாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். பேட்டை வீரபாகுநகர் ரெயில்வே சுரங்கப்பாதை பகுதியில் சென்றபோது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

சாலை மறியல்

இந்த கொலை சம்பவம் குறித்து பிச்சைராஜின் மனைவி பொன்செல்வி கொடுத்த புகாரின் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பிச்சைராஜின் உறவினர்கள் நேற்று மதியம் திடீரென பேட்டை போலீஸ் நிலையம் முன்பு உள்ள சேரன்மாதேவி சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

அவர்களிடம் துணை போலீஸ் கமிஷனர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கொலையாளிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் அவர்களை கைது செய்து விடுவோம் என்று கூறினார்.

மேலும் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜாவும், மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஆறுதல் கூறி சமரசம் செய்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

2 பேர் கைது

இந்த கொலை தொடர்பாக நேற்று மாலையில் பேட்டை வெங்கபுரத்தைச் சேர்ந்த முத்துராசு மகன் பாண்டி (24), அதே பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை மகன் நம்பிதுரை (30) ஆகிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அதில் பாண்டி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

வாக்குவாதம்

கடந்த 6 மாதத்துக்கு முன்பு டாஸ்மாக் பாரில் மது வாங்குவதற்காக வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று கடை ஊழியரிடம் மது தருமாறு கேட்டு வாக்குவாதம் செய்தேன். இதை பிச்சைராஜ் கண்டித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

இதற்காக நேற்று முன்தினம் இரவு நானும், எனது நண்பர் நம்பிதுரையும் சேர்ந்து பேட்டை ரெயில் நிலையத்தை அடுத்த சுரங்கப்பாதை அருகே காத்திருந்தோம். அப்போது அந்த வழியாக வந்த பிச்சைராஜை வழிமறித்து சரமாரியாக வெட்டினோம். இதில் அவர் உயிரிழந்து விட்டார்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

உடல் ஒப்படைப்பு

கொலையில் தொடர்புடையவர்கள் கைதான தகவல் அறிந்ததும் பிச்சைராஜின் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தையொட்டி அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story