2 இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலி


2 இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலி
x
தினத்தந்தி 25 July 2023 7:45 PM GMT (Updated: 25 July 2023 7:45 PM GMT)

பொள்ளாச்சியில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்று தப்பி சென்ற 2 இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலியாகினர். மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலைத்தடுப்பில் மோதி இறந்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்று தப்பி சென்ற 2 இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலியாகினர். மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலைத்தடுப்பில் மோதி இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

2 பேர் பலி

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்தனர். பொள்ளாச்சி வடுகபாளையம் பிரிவு ரெயில்வே மேம்பாலத்தில் வந்த போது திடீரென ஒரு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கினர்.

தப்பி சென்றவர்கள்

அப்போது விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் அருகில் மற்றொரு மோட்டார் சைக்கிள் நின்றிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் 2 மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண்ணை ஆய்வு செய்தனர். இதில் அந்த 2 மோட்டார் சைக்கிள்களும் கோவையில் இருந்து திருடி கொண்டு வரப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் விபத்தில் இறந்தது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது இளைஞர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது இளைஞர் என்பதும் தெரியவந்தது.

அவர்கள் உள்பட 4 பேர் பொள்ளாச்சி கடை வீதியில் நேற்று முன்தினம் பெண்ணிடம் நகையை பறிக்க முயன்று மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றதும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க பாலக்காட்டுக்கு சென்று விட்டு பொள்ளாச்சிக்கு வந்த போது விபத்தில் சிக்கி 2 இளைஞர்கள் பலியானதும் விசாரணையில் தெரியவந்தது.

4 பேர் மீது கோவை, மதுரை, திருப்பூர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

2 பேருக்கு வலைவீச்சு

பலியான 2 பேர் உள்பட 4 பேரும் கூட்டாக சேர்ந்து கோவை குனியமுத்தூரில் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பெண்ணிடம் நகை பறிக்க முயன்று தப்பி சென்ற 2 இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story