குதிரை கடித்து 2 வாலிபர்கள் காயம்
விழுப்புரம் அருகே குதிரை கடித்து 2 வாலிபர்கள் காயம்
விழுப்புரம்
விழுப்புரம் அருகே காகுப்பம் மற்றும் பொய்யாபாக்கம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யனாரப்பன் கோவிலுக்கு குதிரைகளை நேர்த்திக்கடன் விடுவதை பொதுமக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு நேர்ந்து விடப்பட்ட குதிரை ஒன்று பொய்யாபாக்கம் கிராமத்தில் இரை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ஜெயராமன்(வயது 35) மற்றும் பத்மநாபன்(38) ஆகிய இருவரையும் குதிரை திடீரென கடித்தது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் சோ்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வெறிநாய் ஏதும் குதிரையை கடித்து இருப்பதால் அதன் பாதிப்பு குதிரைக்கும் ஏற்பட்டு கடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் பொய்யாப்பாக்கம் கிராம மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். மேலும் அப்பகுதி வழியாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருவதால் அவர்களை குதிரை கடிக்கும் வாய்ப்பு உள்ளதால் அந்த குதிரையை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தை அறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் மனிதர்களை கடித்த குதிரையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குதிரை கடித்து 2 பேர் காயம் அடைந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.