பள்ளி கல்வித்துறை உள்பட 19 துறைகளில் ரூ.20¼ கோடியில் வளர்ச்சி பணிகள்


பள்ளி கல்வித்துறை உள்பட 19 துறைகளில் ரூ.20¼ கோடியில் வளர்ச்சி பணிகள்
x

பள்ளி கல்வித்துறை உள்பட 19 துறைகளில் ரூ.20¼ கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன என்று கனிம அறக்கட்டளை நிதி மேலாண்மை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் கூறினார்.

சேலம்

பள்ளி கல்வித்துறை உள்பட 19 துறைகளில் ரூ.20¼ கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன என்று கனிம அறக்கட்டளை நிதி மேலாண்மை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் கூறினார்.

கனிம அறக்கட்டளை

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் கனிம அறக்கட்டளை நிதியை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாக குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ரூ.20 கோடியே 26 லட்சத்தில் பள்ளிக் கல்வித்துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட 19 துறைகளில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக இந்த நிதியில் இருந்து குடிநீர், கல்வி, சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு மற்றும் சுகாதாரம், பள்ளி வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், கழிப்பறைகள் அமைப்பதற்கும், திறன் மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் நலன் ஆகிவற்றிற்கு என 60 சதவீத அளவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

கனிம அறக்கட்டளை

மீதம் உள்ள 40 சதவீதம் நீர் மேலாண்மை, உள்கட்டமைப்பு, எரிசக்தி மேம்பாடு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் இத்திட்டத்தின் கீழ் தங்களது பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், அடுத்து நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும், எம்.எல்.ஏ.க்களுமான வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், சுரங்கத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story