வெறிநாய் கடித்து 20 ஆடுகள் சாவு
உச்சிப்புளி அருகே வெறிநாய் கடித்து குதறியதில் 20 ஆடுகள் செத்தன.
பனைக்குளம்,
உச்சிப்புளி அருகே வெறிநாய் கடித்து குதறியதில் 20 ஆடுகள் செத்தன.
20 ஆடுகள் சாவு
மண்டபம் யூனியன் உச்சிப்புளி, நாகாச்சி, இருமேனி, பிரப்பன்வலசை, சாத்தக்கோன்வலசை, பூமாலைவலசை, தாமரைக்குளம், நாரையூரணி, ரெட்டையூரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகமான விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் வெறிநாய்த்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழிலும் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி ஊராட்சி வெள்ளமாசிவலசை பகுதியை சேர்ந்த நல்லமுத்து என்பவர் 52 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை தொழுவத்தில் அடைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் தொழுவத்திற்குள் புகுந்து ஆடுகளை கடித்துள்ளன. அவ்வாறு கடித்து குதறியதில் 11 ஆடுகள் மற்றும் 9 ஆட்டுக்குட்டிகள் என 20 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து நல்லமுத்து உச்சிப்புளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கால்நடை மருத்துவர் ஆய்வு
மேலும் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டார். ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக உச்சிப்புளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் வெறிநாய்கள் மனிதர்களை கடித்துள்ளதாகவும், உச்சிப்புளி ஆஸ்பத்திரியில் பலர் வெறிநாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வெறிநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.