அம்பத்தூர் அருகே தறிகெட்டு ஓடி டீ கடைக்குள் புகுந்த பஸ் - பெண்கள் உள்பட 20 பேர் காயம்


அம்பத்தூர் அருகே தறிகெட்டு ஓடி டீ கடைக்குள் புகுந்த பஸ் - பெண்கள் உள்பட 20 பேர் காயம்
x

அம்பத்தூர் அருகே தறிகெட்டு ஓடிய தனியார் பஸ், டீ கடைக்குள் புகுந்தது. இதில் பெண்கள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு பெண் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று நேற்று காலை அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது அயப்பாக்கம்-அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலை மற்றும் அத்திப்பட்டு கலைவாணர் நகர் சந்திப்பு சாலை வளைவில் பஸ் வேகமாக திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்ற ஒரு கார் மீது மோதியதுடன், தொடர்ந்து தறிகெட்டு ஓடி அங்கிருந்த டீ கடைக்குள் புகுந்தது. மேலும் அதன் பின்புறம் உள்ள வீட்டின் சுவரை இடித்து தள்ளிவிட்டு பஸ் நின்றது.

இந்த விபத்தில் டீ கடை உரிமையாளர் தமிழ்ச்செல்வி (வயது 52), கடையில் டீ குடிக்க வந்த 2 பேர் மற்றும் தனியார் பஸ் டிரைவர் கணபதி (34), பஸ்சில் பயணம் செய்த 16 பெண் ஊழியர்கள் என 20 பேர் காயமடைந்தனர். வீட்டின் சுவர் மீது மோதியதில் பஸ்சின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ், அம்பத்தூர் போக்குவரத்து போலீஸ், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீஸ் மற்றும் மதுரவாயல், அம்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வி மட்டும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காயம் அடைந்த மற்றவர்களுக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் இதுபற்றி அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story