சென்னையில் வாகன சோதனையின்போது ஆட்டோவில் சிக்கிய 20 கிலோ தங்கம்..!
சென்னையில் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட 20 கிலோ தங்கம் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை,
சென்னையில் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட 20 கிலோ தங்கம் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை எழும்பூர் எல்.ஜி. ரவுண்டானா அருகே போலீசார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 20 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி அதனை எடுத்து வந்ததும் உறுதியான நிலையில் போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
ஆட்டோவில் தங்கத்தை கடத்தி வந்த பரத் லால், ராகுல் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் சவுகார்பேட்டையில் தங்கி அங்குள்ள கொரியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சூரத்தில் இருந்து தங்கத்தை வாங்கி அங்கிருந்து மும்பை சென்று பின்னர் விமானம் மூலமாக சென்னை சவுகார்பேட்டைக்கு கொண்டு சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை எழும்பூர் போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.