கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற 20 பேர் கைது
பொள்ளாச்சியில் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
கருப்பு கொடி
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கலந்துகொண்டார். பின்னர் பொள்ளாச்சி வழியாக பழனிக்கு சென்றார்.
அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொள்ளாச்சி வழியாக செல்லும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு வெளியீட்டு செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள் கருப்பு கொடி மற்றும் பதாகைகளை கையில் ஏந்தி கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
போலீசில் புகார்
ஏற்கனவே பொள்ளாச்சி நகர தி.மு.க. சார்பில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரை தபால்காரராக சித்தரித்தும், கெட்-அவுட் என்று குறிப்பிட்டும் நேற்று முன்தினம் இரவில் பொள்ளாச்சி நகரில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த நோட்டீசை போலீசார் இரவோடு, இரவாக கிழித்து எறிந்தனர். எனினும் அது தொடர்பாக பொள்ளாச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பா.ஜனதாவினர் புகார் மனு கொடுத்தனர்.
கவர்னரிடம் மனு
மேலும் அவர்கள் கூறும்போது, ஏற்கனவே பிரதமர் மோடி குறித்து அவதூறு நோட்டீஸ் ஒட்டியது குறித்து புகார் கொடுத்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது கவர்னர் குறித்து அவதூறு நோட்டீஸ் ஒட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னரிடம் மனு கொடுக்க உள்ளோம். இதே நிலை நீடித்தால் தமிழக முதல்-அமைச்சர் குறித்து பா.ஜனதாவினரும் அவதூறு நோட்டீஸ் ஒட்டக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்றனர்.