20 ஆயிரத்து 111 மாணவ-மாணவிகள்பிளஸ்-1 தேர்வு எழுதினர்


20 ஆயிரத்து 111 மாணவ-மாணவிகள்பிளஸ்-1 தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 14 March 2023 7:00 PM GMT (Updated: 14 March 2023 7:01 PM GMT)

மாவட்டம் முழுவதும் 87 மையங்களில் 20ஆயிரத்து 111 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.

திண்டுக்கல்

பிளஸ்-1 தேர்வு

தமிழகத்தில் நேற்று முன்தினம் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 10 ஆயிரத்து 602 மாணவர்கள், 11 ஆயிரத்து 727 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 329 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

இதையொட்டி மாவட்டம் முழுவதும் 87 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் மாணவ-மாணவிகள் காலை 9 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வந்தனர். மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.

20 ஆயிரத்து 111 பேர்

இதில் 9 ஆயிரத்து 244 மாணவர்கள், 10 ஆயிரத்து 867 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 111 பேர் தேர்வு எழுதினர். ஆனால் 1,358 மாணவர்கள் மற்றும் 860 மாணவிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இதற்கிடையே தேர்வில் ஆள்மாறாட்டம், காப்பியடித்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் தலைமையில் கல்வி அலுவலர்கள், வருவாய்த்துறையினரை கொண்ட 12 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

மாணவ-மாணவிகள் உற்சாகம்

திண்டுக்கல், நெய்க்காரப்பட்டியில் பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளிடம் தேர்வு தொடர்பாக கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

ஜனனி:- தமிழ் பாடத்தில் அனைத்து பகுதியையும் நன்றாக படித்து இருந்தேன். எனினும் தேர்வு அறைக்குள் சென்றதும் சிறிது பதற்றமாக இருந்தது. ஆனால் வினாக்கள் அனைத்தும் எளிதாக கேட்கப்பட்டு இருந்ததால் உற்சாகமாக எழுதினேன். அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதி இருக்கிறேன். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

கிஷோர்:- தமிழ் தேர்வில் சிறு வினாக்கள் முதல் பெரிய வினாக்கள் வரை அனைத்தும் பாடப்புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன. பாடப்புத்தகத்தை வைத்து தேர்வுக்கு தயாராகி இருந்ததால், விடைகளை எழுதுவதற்கு மிகவும் வசதியாக இருந்தது. முதல் தேர்வே எளிதாக அமைந்ததால் மிகவும் உற்சாகமாக உள்ளது. இது, அடுத்து வரும் தேர்வுகளை எழுத உதவியாக இருக்கும்.

ஒரு மதிப்பெண் வினாக்கள்

யுவானிஸ்ரீ:- தமிழ் பாடத்தில் அனைத்து வினாக்களும் எளிதாக விடை எழுதும் வகையில் கேட்கப்பட்டு இருந்தன. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் விடைகளை எழுத முடிந்தது. அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

மோனிஷ்பாபு:- சில ஒரு மதிப்பெண் வினாக்கள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டு இருந்தது. இதை எதிர்பார்த்து முன்கூட்டியே பாடத்தின் அனைத்து பகுதிகளையும் படித்து இருந்தேன். இதனால் எளிதாக தேர்வு எழுதி விட்டேன்.

மணிகண்டன்:- தமிழ் தேர்வு என்பதால் நன்றாக படித்து இருந்தேன். எனினும் தேர்வு அறைக்கு சென்றதும் சிறிது பதற்றம் இருந்தது. வினாத்தாளை வாங்கி பார்த்தவுடன் வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்ததால் பதற்றம் விலகி மகிழ்ச்சி பிறந்தது. ஒரு மதிப்பெண் மற்றும் 2 மதிப்பெண் வினாக்களில் சில மட்டும் புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டு இருந்தது. மற்றபடி எளிமையாக இருந்தது. 80 மதிப்பெண்ணுக்கு மேல் பெறுவேன்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story