200 ஏக்கர் வாழைகள் நாசம்


200 ஏக்கர் வாழைகள் நாசம்
x

200 ஏக்கர் வாழைகள் நாசமானது.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

வாழைகள் மூழ்கின

கர்நாடகத்தில் பெய்யும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் நேற்று திறந்து விடப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி இந்த நீரானது வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி வீதம் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. இதனைத்தொடர்ந்து கல்லணை நோக்கி காவிரி ஆற்றில் வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடத்தில் 95 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டது.

இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகளில் உள்ள வயல்வெளியில் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து திருச்சி உத்தமர்சீலி பகுதியில் காவிரி கரையோரத்தில் உள்ள வாழை தோட்டங்களில் வெள்ளநீர் புகுந்தது. இதில் சுமார் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைக்கன்றுகள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் கிளிக்கூடு அருகே திருச்சி-கல்லணை சாலையில் உள்ள தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து கல்லணை வழியாக தஞ்சாவூர், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களை மாற்று வழியில் செல்ல, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அறிவுறுத்தினர்.

விவசாயிகளுக்கு இழப்பு

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் சுமார் 200 ஏக்கர் விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை மற்றும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. தற்போது வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற சேதங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Next Story