கடல் நீர் உட்புகுந்ததால் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு


கடல் நீர் உட்புகுந்ததால் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு
x

மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் நாகை அருகே வடக்கு பொய்கை நல்லூரில் கடல் நீர் உட்புகுந்ததால் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்

மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் நாகை அருகே வடக்கு பொய்கை நல்லூரில் கடல் நீர் உட்புகுந்ததால் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கடல் நீர் உட்புகுந்தது

வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் கடந்த 9-ந்தேதி இரவு கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக நாகை, வேளாங்கண்ணியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் கடலோர கிராமங்களான நாகூர் பட்டினச்சேரி அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், வடக்கு பொய்கை நல்லூர் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்தது.

வடக்குபொய்கைநல்லூர், மண்டுவாகரை கடற்கரை ஓரம் சுமார் 200 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விளைநிலங்களில் கடல் நீர் உட்புகுந்ததால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வயல்களில் தண்ணீர் வடியவில்லை

மேலும் இந்த பகுதியில் பாலம் கட்டுமான பணிக்காக அடைக்கப்பட்ட தடுப்புகள், மணல் திட்டுகள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளதால், கடல் நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து 4 நாட்களாகியும் வயலில் தேங்கியுள்ள தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடல் நீர் உட்புகுந்ததால் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு தங்களது நிலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு மட்டுமின்றி, தொடர்ந்து சாகுபடி செய்வதற்கு தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வடக்கு பொய்கைநல்லூர் கடல் முகத்துவாரத்தில் கடல் நீர் உட்புகாமல் தடுக்க கருங்கல் அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தள்ளனர்.


Next Story