2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பாதிப்பா?
2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பாதிப்பா? என்று வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி திடீரென டி.வி.யில் தோன்றிப்பேசி, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.
அந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்படி ரூபாய் 500, ரூபாய் 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது. 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். பெருமளவில் பதுக்கியுள்ளதாக நம்பப்படுகிற 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியே கொண்டு வரச்செய்யும் வகையில்தான் இந்த அதிரடி நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட வியாபாரிகள், பொதுமக்கள் கூறிய கருத்துகள் இதோ....
வங்கிகளில் தனி மையம் தேவை
விழுப்புரம் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராமகிருஷ்ணன்:-
இதுவரை புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த திடீர் அறிவிப்பினால் வியாபாரிகளுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது, எந்த நஷ்டமும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக புழக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பெரும்பாலான வியாபாரிகள் பார்த்ததே கிடையாது. ஆகவே வியாபாரிகள் யாரும் அச்சமடைய தேவையில்லை. கையில் உள்ள இருப்பில் 2 ஆயிரம் ரூபாய் இருந்தாலும், தினசரி வியாபாரத்தில் வரக்கூடிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் தாராளமாக வங்கிக்கணக்கில் செலுத்தி விடலாம். அதற்கேற்ப செப்டம்பர் 30-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொதுமக்கள் கொடுக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஒரு முறைக்கு இருமுறை வியாபாரிகள் அனைவரும் சரிபார்த்து வாங்க வேண்டும். இதற்கு முன்பு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தவுடன் அதன் மறுநாளில் இருந்தே அனைத்து வங்கி கிளைகளிலும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆயிரக்கணக்கானோர் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்த முறை பொதுமக்கள், வியாபாரிகளின் சிரமத்தை போக்கிடும் வகையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அல்லது டெபாசிட் செய்ய 4 மாத காலம் வரை அவகாசம் அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இருப்பினும் வங்கிகளுக்கு சென்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அல்லது டெபாசிட் செய்வதற்கு பொதுமக்களின் சிரமத்தை போக்கிடும் வகையில் வங்கிகளில் தனி மையம் ஏற்படுத்தினால் வசதியாக இருக்கும். பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பாதிப்பு இல்லை
திண்டிவனம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வெங்கடேசன்:-
2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது எனவும், செப்டம்பர் 30 வரை வங்கியில் செலுத்தலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அறிவிப்பினால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அறிவிக்கப்பட்ட கால அவகாசம் குறைவாக உள்ளதால் அதனை நீடிப்பு தந்தால் பலருக்கும் உதவியாக இருக்கும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விட்டபோது அதிகளவில் புழக்கத்தில் இருந்தது. பின்னர் அது குறைந்து பொதுமக்களிடத்தில் குறைவாகத்தான் பரிமாற்றம் இருந்தது. இந்த சூழலில் தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் எந்தவித பாதிப்பும் யாருக்கும் ஏற்படாது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகமாக வைத்திருப்பவர்கள் உடனடியாக வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளும் வசதிகளை சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
பதுக்கல் பணம் வெளியில் வரும்
மேல்மலையனூரை சேர்ந்த ஏழுமலை:-
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு ஏழை, எளிய மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்காது. ஏனெனில்2 ஆயிரம் ரூபாய் நோட்டு வந்தபோது பார்த்திருப்பார்கள். ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் அந்த நோட்டை பார்ப்பதே எட்டாக்கனியாக இருந்து வருகிறது. இந்த நோட்டுகள் எல்லாம் எங்கு சென்றிருக்கின்றன என்று அனைவரும் ஒருவருக்கொருவர் கேள்வி கொண்டிருக்கும்போது ரிசர்வ் வங்கி அந்த நோட்டை திரும்பப்பெறப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் பதுக்கிய பணம் வெளியில் வரும். அதேபோல் இந்த நோட்டுகளை வங்கிக்கணக்கில் வரவு வைத்து அதற்கு பதில் வேறு நோட்டுகளை பெறலாம் என்ற அறிவிப்புதான் சற்று நெருடலாக உள்ளது. காரணம் இந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ஏழை, எளிய மக்களிடம் கொடுத்து மாற்ற முயற்சிப்பார்கள். எனவே இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
ஏழைகளுக்கு பாதிப்பு இ்ல்லை
கள்ளக்குறிச்சியை சேர்ந்த வியாபாரி கணேஷ் பாபு:-
தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. ஏனெனில் இந்த ரூபாய் நோட்டு அச்சடித்து வெளியிட்ட ஒரு வருட காலத்திற்கு பிறகு பொதுமக்கள் மத்தியில் சரிவர புழக்கத்தில் இல்லை.
அனைத்து நோட்டுகளையும் வசதி படைத்தவர்கள், அரசியல்வாதிகள் பதுக்கி வைத்துக்கொண்டனர். எனவே 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவதால் வியாபாரிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
அகரகோட்டாலம் ராஜாராம்:-
தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அவ்வாறு திரும்ப பெறப்படுவதால் ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. பொதுமக்கள் தங்கள் வீட்டில் திருமணம், படிப்பு போன்றவற்றுக்கான செலவுகள், வீடுகட்டுதல் போன்றவற்றுக்காக அதிகபட்சமாக கைவசம் 5 லட்சம் ரூபாய் வரைக்கும்தான் வைத்து இருப்பார்கள். அவ்வாறு இருந்தாலும், அதில் 500 ரூபாய் நோட்டுகள் தான் இருக்கும். 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. பணத்தை பதுக்கி வைத்தவர்களுக்குத்தான் பாதிப்பு. இவ்வாறு அவர்கள் கூறினர்.