2017 புத்தாண்டு பிறந்தது: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து


2017 புத்தாண்டு பிறந்தது: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 31 Dec 2016 10:45 PM GMT (Updated: 31 Dec 2016 8:14 PM GMT)

இன்று புத்தாண்டு பிறந்ததையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

இன்று புத்தாண்டு பிறந்ததையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டாக்டர் ராமதாஸ் 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:– ‘‘கடந்த ஆண்டில் ஏற்பட்ட சோதனைகளை மறந்து சாதனைகளை படைக்கும் ஆண்டாக 2017–ம் ஆண்டு அமையும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வளர்ச்சிக்கு எதிரானவர்களின் கைகளில் சிக்கியிருக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற லட்சியத்தை அடைவதே நமது சாதனை பயணத்தின் நோக்கமாகும்.

திருநாவுக்கரசர் 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்:– ‘‘வேதனைகள், சோதனைகள், இழப்புகள் அகன்று இந்த புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும், மகிழ்வும் பெருகிடவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் 

பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:– ‘‘பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கைகளால் கருப்பு ஒழிந்து, கருமை அகன்று வெள்ளையும், வெளிச்சமும், பணத்திலும் மனதிலும் ஒளிரும் காலம் இந்த புத்தாண்டில் கனிந்து வருகிறது. அனைத்து துன்பங்களும் அகன்று அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் ஆண்டாக இந்த ஆங்கில புத்தாண்டு மலரவேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’’.

வைகோ 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:– ‘‘உலகின் மிக பழமையான தமிழர் நாகரிகத்தின் அடிப்படை அறநெறிகளை பாதுகாக்க இந்த புத்தாண்டு நாளில் உறுதிகொள்ள வேண்டும். தமிழ்நாட்டை பாழ்படுத்தி வருகின்ற மதுவின் கொடுமையிலிருந்து மீட்கவும் இப்புத்தாண்டில் உறுதி ஏற்போம். சுதந்திர தமிழ் ஈழம் எதிர்காலத்தில் மலரவும் 2017–ம் ஆண்டு நுழைவாயில் அமைக்கப்பாடுபடுவோம் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் 

பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.:– ‘‘தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. 2017–ஆம் ஆண்டை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஆண்டாகவும் மாற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நாளில் அனைவரும் உறுதியேற்போம்’’.

ஜி.ராமகிருஷ்ணன் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:– ‘‘2017–ம் ஆண்டு மக்கள் நலனை பாதுகாப்பதற்கான மகத்தான போராட்டங்கள் மலர்கிற ஆண்டாக அமையட்டும். வரலாற்று சக்கரத்தை மனித உழைப்பே வழிநடத்தி வந்திருக்கிறது. புரட்சி உத்வேகத்தோடும், உற்சாகத்தோடும் புத்தாண்டை வரவேற்போம்’’.

ரா.முத்தரசன் 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன்:– ‘‘ஏற்றத்தாழ்வற்ற, மகிழ்ச்சியான சமத்துவம் நிறைந்த வாழ்க்கை வேண்டும். அத்தகைய வாழ்க்கையை பெறுவதற்கு வேற்றுமைகள் மறந்து ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். கரம் கோர்ப்போம். நமக்கான கொள்கைகளை உருவாக்குவதில் வெற்றி காண்போம்’’.

விஜயகாந்த் – சரத்குமார் 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:– ‘‘தொலைநோக்கு சிந்தனையோடு புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்போம். சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி கொண்டாடி மகிழ்வோம். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கஷ்டங்கள் நீங்கி, இருள் சூழ்ந்தவர்கள் வாழ்வில் ஒளிவெள்ளம் ஏற்படட்டும்’’.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:– ‘‘சோதனைகளை சாதனைகளாக்கி புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று நல்வாழ்வு வாழ்வதற்கு இறைவனை வேண்டி அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சாதி, மதம், மொழி, இனம் பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவோம்’’.

ஜி.கே.வாசன்–ஏ.சி.சண்முகம் 

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:– ‘‘துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகக்கூடிய புத்தாண்டாக அமையவேண்டும். இனிமையும், இன்பமும், இயற்கையின் அரவணைப்பும், எழுச்சியும் பிறக்கவேண்டும். தமிழ் மக்கள் வாழ்வில் வளம் பெருகவேண்டும்’’.

புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம்:– ‘‘புத்தாண்டில் எண்ணரிய சாதனைகள் படைக்க சபதம் ஏற்போம். இந்தியா உலகின் முதன்மையான வல்லரசு என்னும் இலக்கை அடைய அனைவரும் மதம், இனம், மொழி வேற்றுமைகளை மறந்து ஒன்று சேருவோம்’’.

கட்சி தலைவர்கள்–அமைப்புகள் 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் நாசே ராமச்சந்திரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் பி.அப்துல் சமது, கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் ஜி.கே.நாகராஜ், சிறுபான்மை சமூகப்புரட்சி இயக்க நிறுவனத்தலைவர் கா.லியாகத்அலிகான், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வீ.சேகர்,

மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் ந.சேதுராமன், சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா. இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் பிரசிடென்ட் அபுபக்கர், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், தியாகராயநகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.அலிமா சம்சுகனி உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



Next Story