இலங்கை சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்கள் விடுதலை இரு நாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் முடிவு

இலங்கை சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்கள் விடுதலை  இரு நாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் முடிவு
x
தினத்தந்தி 2 Jan 2017 7:39 PM IST (Updated: 2 Jan 2017 7:38 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த இரு நாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இலங்கை சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இலங்கையில் நடந்த இரு நாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் 114 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 51 மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டனர்.  பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடைமை ஆக்கப்படும் என இலங்கை மந்திரிகள் அறிவித்தனர்.

இந்த நிலையில், இலங்கை சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இது பற்றி தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தமிழக மீனவர்களின் 114 படகுகள் உள்ளன. அவற்றை விடுவிக்க வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தினார்.  இதே கருத்தைதான் கடந்த 31-ந் தேதி இந்தியா- இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் மட்டத்தில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தினோம்.

எனவே, மத்திய அரசு இதில் தலையிட்டு இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 114 படகுகளையும், 51 மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இலங்கையில் நடந்த இரு நாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் இலங்கை சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story