ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு 4–ந்தேதி சென்னை வருகை பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்


ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு 4–ந்தேதி சென்னை வருகை பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 2 March 2017 12:31 AM IST (Updated: 2 March 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு வருகிற 4–ந் தேதி சென்னை வருகிறார்.

சென்னை,

ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு 4–ந் தேதி (சனிக்கிழமை) சென்னை வருகிறார். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில் அவர் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

மூர்மார்க்கெட்–பேசின்பிரிட்ஜ் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5 மற்றும் 6–வது ரெயில்வே தடங்களில் மின்சார ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

இதேபோன்று எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் ‘வை–பை’ வசதி, தாம்பரம் ரெயில் நிலையத்தில் இரண்டாம் நுழைவுவாயிலில் துரித உணவகம், நெமிலிச்சேரி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான சுரங்க பாதை, மாம்பலத்தில் இரட்டை வழித்தடம் கொண்ட புதிய பிளாட்பாரம், கோடம்பாக்கத்தில் புதிய டிக்கெட் முன்பதிவு அலுவலகம், திருவான்மியூரில் பயணிகளுக்கான புதிய நடைமேம்பாலம் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட டிக்கெட் முன்பதிவு அலுவலகம் ஆகியவற்றையும் தொடங்கி வைக்கிறார்.

மதுரை ரெயில் நிலையம்

மேலும் வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிடுகிறார்.

மதுரை ரெயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘வை–பை’ வசதி, செங்கோட்டை–ஆரியங்காவு இடையேயான அகல ரெயில்பாதை திட்டம் ஆகியவற்றையும் சுரேஷ் பிரபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சென்டிரல் ரெயில் நிலையத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் ‘வார்தா’ புயலின் போது பாதிப்படைந்த மேற்கூரைகளை சீரமைக்கும் பணி, நிலையங்களுக்கு வெள்ளையடித்தல், சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


Next Story