ஆன்-லைனில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரைவில் ஆதார் கார்டு கட்டாயம் ஆகிறது
ஆதார் கார்டுகளை கொண்டு ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையிலான நடவடிக்கையை நோக்கி ரெயில்வே நகர்கிறது.
புதுடெல்லி,
ரெயிலில் டிக்கெட்கள் மொத்தமாக பதிவு செய்யப்படுவது, மோசடிகள், ஆள் மாறாட்டம் ஆகியவற்றை தடுக்கும் விதமாக ரெயில்வே விரைவில் ஆதார் கார்டை கட்டாயம் ஆக்குகிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் முதியோர்கள் ரெயிலில் பயண சலுகைகளை பெற ஆதார் அடையாள அட்டைகள் கட்டாயம் ஆக்கப்படுகிறது, இதற்கான சோதனை நகர்வு இப்போது நடந்து வருகிறது. இப்போதைய புதிய வர்த்தக திட்டத்தை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு வெளியிட்டு உள்ளார். ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு ரெயில்வே டிக்கெட்டை பதிவுசெய்யும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
ரெயில்வே 60 ஆயிரம் 'பாயிண்ட் ஆப் சேல்' இயந்திரங்கள் மற்றும் 1000 ஆட்டோமெட்டிக் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதன் மூலம் ரொக்கமில்லா பரிவர்த்தைனையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
பணமில்லா பரிவர்த்தனையை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த டிக்கெட் ஆப் மே மாதம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. “ரெயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒரு முறை ஆதார் அடையாள அட்டை எண்ணை தெரிவிக்கவேண்டும். போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி மோசடி செய்யப்படுவதை தவிர்க்கவே இந்நகர்வு,” என மூத்த ரெயில்வே அதிகாரி கூறிஉள்ளார். இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒரு சாப்ட்வேரை கொண்டுவர ரெயில்வே தயாராகி வருகிறது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
மொத்தமாக ரெயில் டிக்கெட்கள் பதிவு செய்யப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் நடவடிக்கைகளை தடுக்க ரெயில்வே தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டும், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
Next Story