இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிரான போராட்டத்திற்கு தி.மு.க. துணைநிற்கும் மு.க.ஸ்டாலின்
இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிரான போராட்டத்திற்கு தி.மு.க. துணைநிற்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
நெடுவாசல்,
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தினை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர் ஆகியோரை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர்களுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழக முதல்-அமைச்சர் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து 23 கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவை தந்துவிட்டு வந்திருக்கிறார். அந்த மனுவில் நெடுவாசலில் நீங்கள் போராடிக்கொண்டிருக்கின்ற, உங்களுடைய பிரச்சினை பற்றி சுட்டிக்காட்டப்பட்டதா என்று கேட்டால் இல்லை என்பது தான் உண்மை. அது உள்ளபடியே நமக்கு வேதனையாக இருக்கின்றது. ஏன் சுட்டிக்காட்டப்படவில்லை என்பது புரியாத புதிராக, அதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என்பது தெரியாமல் நாம் இருக்கிறோம்.
திட்டம் வராது
ஆனால் முதல்-அமைச்சர் வெளியில் வந்து பத்திரிகையாளர்களிடம் இந்த பிரச்சினை பற்றியும் சொன்னதாக தெரிவிக்கிறார். அவர் உண்மையாகவே சொல்லி இருந்தால் நமக்கு மகிழ்ச்சி தான். ஆனால், அவர் சொன்னதாக தெரிவித்த பிறகும் மத்திய அரசு இதுவரை ஒரு நல்ல முடிவை அறிவிக்கவில்லை என்பது வேதனையாக இருக்கிறது.
மத்திய அரசை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, ஏறக்குறைய இன்றைக்கு 16-வது நாளாக எதைப்பற்றியும் கவலைப்படாமல், எந்த வித அரசியல் கலப்புமின்றி ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் பிரச்சினையாக உள்ள இந்த பிரச்சினையை முன்வைத்து, தொடர்ந்து நடைபெறக்கூடிய இந்த போராட்டத்தின் தன்மையை புரிந்துகொண்டு, இந்த திட்டம் நிச்சயம் வராது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.
தி.மு.க. துணை நிற்கும்
இந்த திட்டம் அனுமதிக்கப்படாது என்று முதல்-அமைச்சர் சொல்லி இருந்தாலும், மத்திய அரசிடம் வலியுறுத்தி, இந்த பிரச்சினையை சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் பணியில் மாநில அரசு ஈடுபட வேண்டுமென்று நான் மாநில அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்ந்து இதேநிலை நீடிக்குமென்று சொன்னால், போராட்டத்தினை தொடர்ந்து நடத்துவதற்கு நீங்களும் நிச்சயமாக தயாராக இருக்கின்றீர்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டு இருக்கிறேன். எனவே, மத்திய, மாநில அரசுகள் விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிக்குமென நான் எதிர்பார்க்கின்றேன். ஒருவேளை அந்த நிலை ஏற்படாமல் போகும் சூழ்நிலையில் நீங்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு தி.மு.க. என்றைக்கும் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
தி.மு.க. ஆட்சியில்...
கேள்வி:- தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் இந்த திட்டம் கொண்டுவந்ததாகவும், 2006-ல் நீங்கள் தான் கையெழுத்து போட்டீர்கள் என்றும் வைகோ கூறியிருக்கிறாரே?
பதில்:- அது மீத்தேன் திட்டம். அதுகூட திட்டத்தை நாங்கள் கொண்டுவரவில்லை. மத்திய அரசு திட்டத்தை ஆய்வு நடத்துவதற்காக அனுமதி கேட்டபோது, அந்த ஆய்வு நடத்துவதற்கு புரிந்துணர்வு கையெழுத்து போட்டிருப்பது உண்மை. அதனை மேற்கொள்ள என்னென்ன கட்டுப்பாடுகள், விதிமுறைகள் போடப்பட்டு இருக்கின்றன என்பதை எல்லாம் வைகோ முதலில் படித்துப்பார்க்கட்டும். அதில், மக்களுடைய கருத்துகளை கேட்க வேண்டும், ஆய்வு நடத்த வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், இதெல்லாம் முடித்து தான் தொடங்கப்பட வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்ல, திட்டத்துக்கு அனுமதி கொடுக்கும் இடத்தில் இருப்பது மாநில அரசு கிடையாது. நான் கையெழுத்து போட்டதால் அனுமதி கொடுப்பதாக ஆகிவிடாது. ஆய்வு நடத்துவதற்கு தான் அனுமதி கொடுத்தோமே தவிர, திட்டத்தை கொண்டுவருவதற்கான முழு அதிகாரமும் மத்திய அரசிடம் இருக்கிறது.
ஆதரவா? இல்லையா?
கேள்வி:- பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பொழுது ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருக்கிறதா?
பதில்:- நிச்சயமாக. அதுமட்டுமல்ல, உடனடியாக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டி, இதை ஒரு தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம்.
கேள்வி:- இந்த போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவளிக்கிறதா? இல்லையா? என தெளிவாக அறிவிக்கவில்லையே?
பதில்:- இதுகுறித்து எல்லாம் சிந்திப்பதற்கு அவர்களுக்கு போதிய நேரமில்லை. அவர்களுடைய எண்ணம் என்னவென்றால், கூவத்தூரில் அடைத்து வைத்திருந்தபோது எந்த கட்டுப்பாட்டில் 122 எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பாக வைத்திருந்தார்களோ, அதே நிலைமைதான் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் அமைச்சர்களே பெங்களூருக்கு நேரில் சென்று, அங்கு சிறையில் இருக்கக்கூடிய சசிகலாவை சந்தித்து யோசனை கேட்டுக்கொண்டு வருவதற்கு மட்டும் தான் நேரம் இருக்கிறதே தவிர, இதுபோன்ற மக்கள் பிரச்சினை கள் பற்றி எல்லாம் சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை.
தி.மு.க. அரசியலாக்குகிறதா?
கேள்வி:- தி.மு.க. இந்த பிரச்சினையை அரசியலாக்குகிறது என்றும், ஆக்கபூர்வமாக எதிர்க்கட்சி செயல்படவில்லை என்றும் தமிழிசை சவுந்தர ராஜன் சொல்லியிருக்கிறாரே?
பதில்:- நாங்கள் ஜல்லிக்கட்டையும் அரசியல் ஆக்க விரும்பவில்லை. இதையும் அரசியல் ஆக்க விரும்பவில்லை. இதை அரசியல் ஆக்கி அதில் ஆதாயம் தேடவேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு கிடையாது.
கேள்வி:- நடிகை பாவனாவுக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் மத்திய மந்திரிகள் நிறைய பேர் உடனடியாக கண்டனம் தெரிவித்தார்கள். ஆனால், 16 நாளாக நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லையே?
பதில்:- தமிழிசை சவுந்தர ராஜனிடம் தான் இந்த கேள்வியை கேட்டு விளக்கம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
Next Story