மூன்றாம் பாலினமாக திருநங்கைகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
மூன்றாம் பாலினமாக திருநங்கைகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31–ந் தேதி சர்வதேச திருநங்கைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. நம் நாட்டில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் வழங்கப்படும் உரிமைகள் அனைத்தும் திருநங்கைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இவர்கள் சமுதாயத்தில் தங்களின் உரிமைகளைப் பெறுவதற்காக தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பளித்தது. இவர்களுக்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் கிடைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
உலக திருநங்கைகள் தினத்தில் மட்டும் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால் போதாது, இவர்களுக்கு சமூக உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கப்பெறும் வரை அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். உலகம் முழுவதும் வாழும் மூன்றாம் பாலினம் (திருநங்கைகள்) அனைவருக்கும் சமூகத்தில் அந்தஸ்து, மரியாதை, முழு உரிமைகள் கிடைத்து நல்வாழ்வு வாழவேண்டும் என சர்வதேச திருநங்கைகள் தினத்தில் த.மா.கா. சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story