3–ந் தேதி விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் சு.திருநாவுக்கரசர் அறிவிப்பு
தமிழகத்தில் 3–ந் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு தமிழகத்தில் 3–ந் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆதரித்து பங்கேற்பது என முடிவு செய்துள்ளது.
நெடுவாசல் போராட்டக்காரர்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு வழங்கிய வாக்குறுதியை மீறி மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு எதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 18 நாட்களாக இரவு பகல் பாராமல் ஜந்தர் மந்தர் சாலையில் நூதனப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்தகைய போராட்டங்கள் குறித்து மத்திய பா.ஜ.க. அரசோ, மாநில அ.தி.மு.க. அரசோ கண்டுகொண்டதாக தெரியவில்லை. இத்தகைய மக்கள் விரோத போக்கை கைவிட்டு போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story