சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும்; மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கட்டணம் உயர்வுதேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களின் தலையில் மீண்டும் ஒரு கட்டண சுமையை ஏற்றி வைத்திருக்கிறது மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம்.
இந்த கட்டண உயர்வால் தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளின் வழியாக செல்லும் வாகனங்கள் இனி அதிக கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அரசின் கடமைகடந்த செப்டம்பர் மாதத்தில்தான் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதற்குள் இன்னொரு சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது சரக்கு கட்டண உயர்வுக்கு வித்திட்டுள்ளது. இதன்மூலம் அத்தியாவசிய பொருள்களின் விலை மேலும் அதிகரித்து அன்றாட வாழ்க்கையில் சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய இன்னல்களைத் தோற்றுவித்துள்ளது.
மக்களுக்கு பொது சேவைகளை வழங்க வேண்டியது ஒரு அரசின் கடமை. ஆனால் சுங்கச்சாவடிகளில் கட்டணம், வங்கிகளில் எதற்கெடுத்தாலும் கட்டணம், மானியங்கள் ரத்து என்று பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நாட்டில் உள்ள மக்கள் அனைவருமே அரசு வழங்க வேண்டிய அத்தியாவசியமான பொது சேவைகளுக்குக்கூட அத்துமீறிய கட்டணங்களை செலுத்தும் நிலை உருவாகியிருக்கிறது. ஒரு அரசாங்கமே எதற்கெடுத்தாலும் மக்களிடம் இருந்து கட்டண வசூல் செய்வது ‘‘மக்களால் மக்களுக்காக மக்களே’’ ஆட்சி செய்யும் ஜனநாயக பாதையில் இருந்து விலகிச் செல்லும் ஆபத்தான போக்காகவே நான் கருதுகிறேன்.
திரும்பப்பெற வேண்டும்சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை எதிர்த்து ஏற்கனவே போராட்டங்களை தொடங்கி லாரி உரிமையாளர்கள் தங்கள் லாரிகளை நிறுத்திவிட்டார்கள். இதனால் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு அன்றாட தேவைக்குரிய பொருட்கள் எல்லாம் எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகி அடித்தட்டு மக்கள் முதல் வியாபாரிகள் வரை அனைவரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தமிழகத்திலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை என்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆகவே, சுங்கச்சாவடிகள் கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், 20 வருடத்திற்கும் மேலாக கட்டணங்களை வசூலிக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை மூடவேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தையும், மத்திய அரசையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.