மராட்டிய சட்டசபையில் 9 எம்.எல்.ஏ.க்களின் இடைநீக்கம் ரத்து


மராட்டிய சட்டசபையில் 9 எம்.எல்.ஏ.க்களின் இடைநீக்கம் ரத்து
x
தினத்தந்தி 1 April 2017 11:59 PM GMT (Updated: 1 April 2017 11:59 PM GMT)

மராட்டிய சட்டசபையில் இடைநீக்கம் செய்யப்பட்ட 19 எம்.எல்.ஏ.க்களில் 9 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

மும்பை,

மராட்டிய சட்டசபையில் கடந்த 18-ந் தேதி 2017-18-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் தாக்கல் செய்தார். அப்போது விசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபை வளாகத்துக்கு வெளியே பட்ஜெட் புத்தகத்தை தீயிட்டு எரித்தனர்.

இதையடுத்து சபாநாயகர் ஹரிபாவு பாக்டே, பட்ஜெட் தாக்கலின் போது இடையூறு செய்ததாக 19 எம்.எல்.ஏ.க்களை வருகிற டிசம்பர் 31-ந் தேதி வரை அதாவது 9 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 9 பேர். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 10 பேர் ஆவர்.

ரத்து

இந்த நிலையில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தின் போது இரு கட்சியையும் சேர்ந்தவர்களில் 9 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை சட்டமன்ற விவகாரத்துறை மந்திரி கிரிஷ் பாபத் கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து அந்த 9 எம்.எல்.ஏ.க்களின் இடைநீக்கத்தை சபாநாயகர் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டவர்கள் காங்கிரசை சேர்ந்த சங்ராம் தோப்தே, அப்துல் சத்தார், அமித் ஜானக், சாவந்த் மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த நகாரி ஜிர்வால், தீபக் சவான், தத்தாத்ரே பர்னே, தத்காரே, வைபவ் பிச்சாத் ஆகியோர் ஆவர்.

மேலும் 10 எம்.எல்.ஏ.க்களின் இடைநீக்கம் விரைவில் ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

Next Story