‘அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை அவமானமாக கருத வேண்டும்’; திருநாவுக்கரசர் பேட்டி
அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை அவமானமாக கருத வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பட்டதாரிகள் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி, குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இன்னும் அதிகரிக்க தான் போகிறது. வறட்சி நிவாரண நிதியாக ரூ.39 ஆயிரத்து 500 கோடி மத்திய அரசிடம் கேட்டதற்கு, ரூ.1,700 கோடி கொடுத்தால் அதை வைத்து என்ன செய்ய முடியும். வறட்சி தொகையை வழங்க வேண்டும் என்று மாநில அரசு மத்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும். டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை எங்கள் துணைத்தலைவர் ராகுல்காந்தி சந்தித்து பேசியுள்ளார். தமிழக முதல்–அமைச்சர் டெல்லியில் அனாதை போல் போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து பேச வேண்டும். என்ன தீர்வுகாண முடியும் என்று பார்த்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். உணவு தரும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும். அவர்கள் என்ன பாவப்பட்டவர்களா?. எனவே விவசாய பிரதிநிதிகளை பிரதமர் சந்திக்க முன்வர வேண்டும்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே பணப்பட்டுவாடா அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. அதை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும். அரசியல் கட்சிகளும் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை அவமானமாக கருத வேண்டும். மக்களும் பணத்துக்காக ஓட்டுகளை விற்கக்கூடாது.
விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு முழு ஆதரவை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் வருகிற 5–ந் தேதி விவசாயிகள் நலனை காக்க வேண்டும் என்று தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
வன்மையாக கண்டிக்கிறதுபா.ஜ.க. விவசாயிகளின் தேவைகளை சரிசெய்யவில்லை. அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது. அவர்களால் செய்ய முடியும். அதை கேட்ட எங்களை அதை பற்றி பேச தகுதி இல்லை என்று எப்படி கூறலாம்.
இந்தி மொழி கட்டாயமாக திணிக்கப்படாது என்று ஜவஹர்லால் நேரு வாக்குறுதி அளித்தார். பா.ஜ.க. சமஸ்கிருதத்தையும், இந்தியையும் கட்டாயமாக்குவது, திணிப்பது என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள். விருப்பப்பட்டு படிப்பது அவர்களுடைய இஷ்டம். மொழியாலும், சாதியாலும், மதத்தாலும் பிரித்தாளும் மத்திய அரசின் செயலை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.