தி.மு.க.வுக்கு கிடைக்க உள்ள வெற்றி தமிழகத்துக்கு நல்ல விடிவு காலத்தை பெற்று தரும்


தி.மு.க.வுக்கு கிடைக்க உள்ள வெற்றி தமிழகத்துக்கு நல்ல விடிவு காலத்தை பெற்று தரும்
x
தினத்தந்தி 2 April 2017 8:45 PM GMT (Updated: 2 April 2017 6:15 PM GMT)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைக்க உள்ள வெற்றி தமிழகத்துக்கு நல்ல விடிவு காலத்தை பெற்று தரும் என்று சென்னையில் நடந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தி.மு.க. வர்த்தக அணி மாநில துணை செயலாளர் பி.டி.பாண்டிச்செல்வம்–ஜோதி தம்பதியினரின் மகன் கதிரவரனுக்கும், மணலி கே.அன்பழகன்–சாந்தி தம்பதியினரின் மகள் சண்முகபிரியாவுக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

தி.மு.க. வெற்றி

12–ந் தேதி ஒரு இடைத்தேர்தலை நாமெல்லாம் சந்திக்கவிருக்கிறோம். அந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைக்குவுள்ள வெற்றி தமிழகத்துக்கு நல்ல விடிவுகாலத்தை ஏற்படுத்துகிற வகையில் அமையவிருக்கிறது. எனவே, அப்படிப்பட்ட தேர்தல் பணியில் நாமெல்லாம் இன்றைக்கு ஈடுபட்டிருக்கிறோம். இதே ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டொரு நாட்களுக்கு முன்னால் நடந்தேறிய தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மிக பிரம்மாண்டமானதாக நடந்தது.

இதுவரை ஆர்.கே.நகர் தொகுதியில் இவ்வளவு பிரம்மாண்டமாக ஒரு கூட்டம் நடந்ததாக வரலாறு கிடையாது. இனிமேல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிற சூழலில் ஒரு பெரிய கூட்டம் நடந்திருக்கிறது என்று சொன்னால், ஏதோ, தனிப்பட்ட முறையில் எனக்காக கூடிய கூட்டமல்ல, தனிப்பட்ட தி.மு.க.வுக்காக கூடிய கூட்டமாகவும் எண்ணிப்பார்க்கவில்லை, அதேபோல், தனிப்பட்ட எங்களுக்காக கூடிய கூட்டமுமில்லை. ஒரே உணர்வாக எனக்கு என்ன தோன்றியது என்றால், நிச்சயமாக உறுதியாக தமிழ்நாட்டிலே மிக விரைவிலே ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத்தான் அந்த கூட்டம் அமைந்தது என்பது உண்மை.

இந்தி எழுத்துகள்

இங்கே வந்திருப்பவர்களில் ஆர்.கே.நகர் வாக்காளர்கள் பலர் இருக்கலாம். அல்லது பக்கத்து தொகுதியிலிருந்தோ, பக்கத்துக்கு ஊரிலிருந்தோ, வேறு பகுதியிலிருந்தோ வந்திருக்கலாம். அது வேறு. ஆனால், வாக்காளர்களாக இருந்தால் உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், வாக்காளர்கள் இல்லை என்று சொன்னால், உங்கள் உறவினர்கள் இடத்தில், இந்த தொகுதியில் இருக்கக்கூடிய நண்பர்கள் இடத்தில் தயவுசெய்து இன்றைக்கு நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகளை எல்லாம் எடுத்துச்சொல்லி, நிச்சயமாக உறுதியாக இந்த தேர்தலை பொறுத்தவரையிலே, தி.மு.க. வேட்பாளராக, நம்முடைய கூட்டணி கட்சியின் வேட்பாளராக, உங்களிடத்திலே ஒப்படைக்கப்பட்டிருக்கக் கூடிய மருது கணேஷ், மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கு உதயசூரியன் சின்னத்திற்கு நீங்கள் எல்லாம் நல ஆதரவை தந்து, அந்த வெற்றியை தேடித்தர வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய மைல் கற்களில் இந்தி எழுத்துகள் இடம்பெறும் நிலை உருவாகி இருக்கிறது என்றால், தயவுசெய்து அனைவரும் சிந்திக்க வேண்டும். நாங்கள் இந்தியை எதிர்க்கிறோம் என்று யாரும் நினைத்து விடக்கூடாது. இந்தி திணிப்பை நாம் எதிர்க்கிறோம். ஆக, நமது தமிழ்மொழியை காப்பாற்ற வேண்டும். அதற்கான எத்தனையோ பணிகளில் இன்றைக்கு ஈடுபட்டிருக்கிறோம்.

தமிழ் பெயர்கள்

மணமக்களை மட்டுமல்ல, இங்கு வந்திருக்கும் அனைவரையும் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, அழகான தமிழ் பெயர்களை சூட்டி, தமிழுக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் உங்கள் கடமையை ஆற்றிட வேண்டும். அதே நேரத்தில், வரும் 12–ந் தேதியன்று நடைபெற இருக்கக்கூடிய, ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை உருவாக்கித்தருவதற்கு, நீங்கள் அத்தனை பேரும் துணை நிற்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.


Next Story