ஆவடி அருகே ‘உழவே தலை’ என்ற விவசாய மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து பதில் அளிக்க வேண்டும்


ஆவடி அருகே ‘உழவே தலை’ என்ற விவசாய மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து பதில் அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 April 2017 1:47 AM IST (Updated: 3 April 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

‘உழவே தலை’ என்ற விவசாய மாநாட்டை ஆவடி அருகே நடத்த அனுமதி வழங்குவது குறித்து பதில் அளிக்கும்படி போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் எம்.சந்திரமோகன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

துயரம் தெரிவது இல்லை

ஊழலுக்கு எதிராக ‘அறப்போர்’ என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறேன். தற்போது, தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியால் விவசாயிகள் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்து வருகின்றனர். துரதிருஷ்டவசமாக, விவசாயிகள் படும் அந்த வேதனை, நகரவாசிகளுக்கு தெரிவது இல்லை. அதனால், விவசாயிகளின் துயரத்திலும், போராட்டத்திலும் நகரவாசிகள் பங்கெடுப்பதும் இல்லை.

தமிழகத்தில் கிராமப்புற விவசாயிகளையும், விவசாயத்தில் நவீன உத்திகளை கையாளும் நகர்ப்புற வல்லுனர்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக ‘உழவே தலை’ என்ற தலைப்பில் விவசாய மாநாட்டை, சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மார்ச் 31–ந் தேதி முதல் தொடங்க திட்டமிட்டு இருந்தோம்.

அனுமதி மறுப்பு

இதற்காக வெளியூரில் இருந்து குடும்பத்தோடு விவசாயிகள் ஏராளமானோர் சென்னை வந்து விட்டனர். ஆனால், திடீரென போலீசார் இந்த மாநாட்டிற்கு அனுமதி வழங்க மறுத்து விட்டனர். ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்குள் விவசாயிகள் மீறி சென்றால் கைது செய்வோம் என்று மிரட்டுகின்றனர்.

அதேநேரம், இந்த மாநாட்டிற்கு அனுமதி தர ஏன் மறுக்கப்படுகிறது? என்பதையும் எழுத்துப்பூர்வமாக போலீஸ் தரப்பில் தரவில்லை. எனவே விவசாயிகளின் நலனுக்காக அமைதியான முறையில் தனியார் மைதானத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்க சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மிரட்டல்

இந்த வழக்கை நீதிபதி எம்.எஸ். ரமேஷ், விடுமுறை நாளான நேற்று அவசர வழக்காக விசாரித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வி.சுரேஷ், ‘வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி, இந்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல் போலீசார் தடுக்கின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர்.

அவர்கள் தங்குவதற்கு இடமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகிகளை போலீசார் கடுமையாக மிரட்டியுள்ளதால், அவர்கள் இனி மாநாடு நடத்த அனுமதி தரமாட்டார்கள். எனவே ஆவடி அருகே, பாண்டிமாபுரத்தில் மாநாடு நடத்த அனுமதி வழங்கும்படி போலீசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று வாதிட்டார்.

பதில் அளிக்க வேண்டும்

இதற்கு அரசு பிளீடர் எம்.கே.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘‘ஆவடி அருகே ‘உழவே தலை’ என்ற மாநாடு நடத்துவதற்கு மனுதாரருக்கு அனுமதி வழங்குவது குறித்து தமிழக போலீசார் பதில் அளிக்கவேண்டும். இந்த வழக்கு திங்கட்கிழமை (இன்று) காலையில் மீண்டும் எடுத்து கொள்ளப்படும்’’ என்று உத்தரவிட்டார்.


Next Story