ஆர்.கே.நகர் தொகுதியில் முறைகேடு நடப்பதாக புகார்; தேர்தல் கமி‌ஷன் இன்று முக்கிய ஆலோசனை


ஆர்.கே.நகர் தொகுதியில் முறைகேடு நடப்பதாக புகார்; தேர்தல் கமி‌ஷன் இன்று முக்கிய ஆலோசனை
x
தினத்தந்தி 2 April 2017 9:13 PM GMT (Updated: 2 April 2017 9:13 PM GMT)

ஆர்.கே.நகர் தொகுதியில் முறைகேடுகள் நடப்பதாக வந்துள்ள புகாரை தொடர்ந்து, தலைமை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருடன் தேர்தல் கமி‌ஷன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது.

சென்னை,

காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 12–ந் தேதி (புதன்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க. (அம்மா) கட்சியின் சார்பில் டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) சார்பில் இ.மதுசூதனன், பா.ஜனதா சார்பில் கங்கை அமரன், தே.மு.தி.க. சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லோகநாதன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்பட மொத்தம் 62 பேர் களத்தில் உள்ளனர்.

பண பட்டுவாடா புகார்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியாக பத்மஜாதேவி முதலில் நியமிக்கப்பட்டார். ஆனால், ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் கமி‌ஷனிடம் புகார் செய்ததை தொடர்ந்து, தேர்தல் அதிகாரி பத்மஜாதேவி, சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோர் மாற்றப்பட்டனர். புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீண் பி.நாயரும், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக கரண் சின்காவும் நியமிக்கப்பட்டனர்.

விசாரணை

தேர்தல் பொதுப் பார்வையாளராக பிரவீண் பிரகாஷ், செலவின பார்வையாளராக அபர்ணா வில்லூரி, காவல் பார்வையாளராக ஷிவ்குமார் வர்மா, சிறப்பு பார்வையாளர்களாக சமீர் டெக்ரிவால், மல்லிகார்ஜூனா உட்டாரே ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வேட்பாளர்களின் செலவு கணக்கை கண்காணித்ததுடன், பண பட்டுவாடா தொடர்பான புகார் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை துணை தேர்தல் கமி‌ஷனர் உமேஷ் சின்ஹா சென்னை வந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் போலீஸ் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து பேசினார்.

அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

மறுநாள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த உமேஷ் சின்ஹா, பின்னர் தனது ஆய்வு அறிக்கையை நேற்று முன்தினம் தேர்தல் கமி‌ஷனிடம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதியின் உதவி தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் கூண்டோடு மாற்றப்பட்டனர். மேலும், கூடுதலாக 5 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், சிறு தெருக்கள் மற்றும் சந்துகளில் சென்று ஆய்வு மேற்கொள்ள மைக்ரோ பார்வையாளும் நியமிக்கப்பட்டனர். அனைத்து தெருக்களிலும் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இப்படி, பண பட்டுவாடாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமி‌ஷன் தொடர்ந்து எடுத்தாலும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், இந்த புகார்கள் தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இன்று முக்கிய ஆலோசனை

ஆர்.கே.நகர் தொகுதியில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், வருமான வரித்துறை முதன்மை ஆணையர் அஜித்குமார் ஸ்ரீவத்சவா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில், ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் குறித்தும், பண பட்டுவாடா புகார் தொடர்பாகவும் விவாதிக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக, தேர்தல் கமி‌ஷன் செயலாளர் மலாய் மாலிக், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தொகுதி நிலவரம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்த தயாராவது குறித்தும், அது தொடர்பான பிற வி‌ஷயங்களை விவாதிப்பதற்காகவும், தாங்களும், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ஆகியோரும் ஏப்ரல் 3–ந் தேதி (இன்று) பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சென்னையில் இருந்தபடி பங்கேற்க வேண்டும்.

இந்த கூட்டத்தில் தாங்களும், பிற அதிகாரிகளும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூட்டத்திற்கு வரும்போது, ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் குறித்த தற்போதைய விவரங்களையும் கொண்டுவர வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story