தமிழகத்தில் சரக்கு–சேவை வரி சட்டத்தை ஜூலை 1–ந்தேதி அமல்படுத்த கூடாது


தமிழகத்தில் சரக்கு–சேவை வரி சட்டத்தை ஜூலை 1–ந்தேதி அமல்படுத்த கூடாது
x
தினத்தந்தி 6 Jun 2017 4:15 AM IST (Updated: 6 Jun 2017 12:05 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சரக்கு–சேவை வரி சட்டத்தை ஜூலை 1–ந்தேதி அமல்படுத்தாமல் தள்ளி வைக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று மனு அளித்தார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பொதுச்செயலாளர் மோகன், செய்தித் தொடர்பாளர் பாண்டியராஜன், கூடுதல் செயலாளர் வி.பி.மணி உள்பட நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், ஏ.எம்.விக்கிரமராஜா 3 மனுக்களை அளித்தார். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:–

சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தை ஜூலை 1–ந்தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வரி விகிதங்கள் பொதுமக்களையும், வணிகர்களையும் பாதிக்கும் கடுமையான வரி விகிதங்கள் ஆகும்.

இதனால் லட்சக்கணக்கான வணிகர்கள் குறிப்பாக கிராமங்கள், சிறு நகரங்களில் உள்ள வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். ஜூலை 1–ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்தினால் வணிகத்தில் பல குழப்பநிலைகள் ஏற்படும். எனவே வணிகர்களை பரிசீலிக்க வணிகர்கள் பிரதிநிதிகள், மத்திய–மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். சரக்கு–சேவை வரி சட்டம் அமல்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டும்.

வரன்முறைப்படுத்த வேண்டும்

விதிமீறல் கட்டிடங்களை இடித்து தள்ளுவதால் எந்தவித பயனும் இல்லை. பொருளாதார இழப்புகள் தான் ஏற்படும். குறிப்பாக தியாகராயநகர் பகுதி கட்டிடங்களுக்கு வரன்முறைப்படுத்த நீதிமன்றமே உத்தரவிட்டு உள்ளது.

எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு கட்டிடங்களை வரன்முறைப்படுத்த உரிய ஆணை பிறப்பித்து தீர்வு காண வேண்டும்.

உள்ளாட்சி கடைகள் வாடகை

தமிழக அரசின் உள்ளாட்சித்துறைக்கு சொந்தமான கடைகளை லட்சக்கணக்கான வணிகர்கள் பல ஆண்டு காலமாக நடத்தி வருகின்றனர். தற்போது 9 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வரும் வணிகர்களின் கடைகளுக்கு மார்க்கெட் சந்தை நிலவரப்படி வாடகை நிர்ணயித்தல் என்ற அடிப்படையில் 500 சதவீதம் முதல் 1500 சதவீதம் வரை உயர்த்திய அறிவிப்பினால் சிறிய, நடுத்தர வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகை உயர்வும், 9 ஆண்டுகளுக்கு ஒருமுறை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வாடகை உயர்வும் விதிக்கும் தெளிவான அரசு ஆணையை பிறப்பித்தால், உள்ளாட்சி கடை வணிகர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். மேலும் அரசின் வருமானமும் உயரும்.  இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.


Next Story