வைரவிழா தொடர்பாக தி.மு.க. கோரிக்கை: சட்டசபையில் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவிக்கப்படுமா?
கருணாநிதியின் வைரவிழா பற்றி சட்டசபையில் பாராட்டு தெரிவிப்பது தொடர்பான தி.மு.க.வின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று சபாநாயகர் ப.தனபால் கூறினார்.
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 14–ந் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தவேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக சபாநாயகர் ப.தனபால் தலைமையில் தலைமை செயலகத்தில் அலுவல் ஆய்வுக்குழு நேற்று கூட்டப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், தங்கமணி,
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், தி.மு.க. கொறடா சக்கரபாணி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
24 நாட்கள் கூட்டம்அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களுக்கு, சபாநாயகர் ப.தனபால் அளித்த பேட்டி வருமாறு:–
அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த நாட்களில் எந்தெந்த மானியக் கோரிக்கையை எடுக்க வேண்டும் என்பது பற்றியும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
14–ந் தேதி கூட இருக்கும் இந்த சட்டசபை 19.7.17 வரை, அதாவது மொத்தம் 24 நாட்கள் நடைபெறவுள்ளது. அனைத்து தினங்களிலும் சட்டசபை காலை 10 மணிக்கு கூடும். எல்லா நாட்களிலும் கேள்வி நேரம் இருக்கும். தேவைப்பட்டால் மாலை நேரத்திலும் சபை கூட்டப்படும்.
ஜெயலலிதா படம் திறப்புமறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறப்பது தொடர்பாக பிரதமரிடம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேதி கேட்டுள்ளார். பிரதமர் எந்த தேதி கொடுக்கிறாரோ அன்று திறக்கப்படும்.
இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் திறக்கப்படுமா என்றால், அது பிரதமர் முடிவு செய்யும் தேதியைப் பொறுத்தது. அவர் கொடுக்கும் தேதியில் படத்திறப்பு விழா நடத்தப்படும்.
மானியக் கோரிக்கைகளின் மத்தியில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. மானியக் கோரிக்கையின் போதே சில மசோதாக்கள் நிறைவேற்றப்படும். மீதியுள்ள மசோதாக்கள் சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளில் நிறைவேற்றப்படும். இதுவரை என்னிடம் மசோதாக்கள் எதுவும் தரப்படவில்லை. இனிமேல் வரலாம்.
தி.மு.க.வுடன் ஒற்றுமைஇந்த கூட்டத்தொடர் 24 நாட்கள் நடப்பதை குறைவான நாட்கள் நடப்பதாகக் கூறமுடியாது. 20 நாட்களில்கூட மானியக் கோரிக்கைகள் நடந்துள்ளன. எனவே, இது சரியானதுதான். எதிர்க்கட்சித் தலைவர் உள்பட அனைவருமே திருப்தியாக இந்த கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலை அமைத்துத் தந்திருக்கிறார்கள்.
தி.மு.க.வினர் திருப்தியாக இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்களும், அவர்களும் ஒற்றுமையாக இருந்து இதை முடிவு செய்துள்ளோம். இதை அனைவருமே ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளோம்.
கருணாநிதிக்கு வைரவிழாமானியக் கோரிக்கையில் எந்தக் கட்சியில் எத்தனை பேர் பேசவேண்டும் என்பதில் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றப்படும். வெட்டுத் தீர்மானங்களும் தரப்பட்டுள்ளன. அதுபற்றி அந்தந்த உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
சட்டசபையில் தி.மு.க.வினரின் செயல்பாடு தொடர்பான பிரச்சினை உரிமைக்குழுவுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. கருணாநிதியின் வைரவிழா பற்றிய தி.மு.க.வின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனித் தீர்மானம்அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் முகமது அபுபக்கர் ஆகியோர் சபாநாயகர் ப.தனபாலிடம் தனித்தனியாக தீர்மானம் கொடுத்துள்ளனர்.
அதில், 1952 முதல் 2017 வரை எம்.எல்.ஏ.யாகவும், மேலவை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், அமைச்சராகவும், முதல்–அமைச்சராகவும் கருணாநிதி இந்தியாவில் யாரும் செய்ய முடியாத சாதனைகளான 13 முறை எம்.எல்.ஏ.யாக தொடர்ந்து இருக்கிறார்.
அவர் தமிழக மக்களுக்கு பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, இலவச மின்சாரம் சுய உதவிக்குழுக்கள் போன்ற திட்டங்களைக் கொண்டுவந்து சாதனை செய்துள்ள கருணாநிதியின் வைர விழாவை முன்னிட்டு, மன்றத்தில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த தனித்தீர்மானத்தை நிறைவேற்றித் தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
--–
செய்தி எண் 23–36 பாயிண்ட் பார் ஆல்