ஜெயலலிதா வீட்டு முன்பு அரங்கேறிய காட்சிகள்: வீதிக்கு வந்த தீபாவின் குடும்ப பிரச்சினை


ஜெயலலிதா வீட்டு முன்பு அரங்கேறிய காட்சிகள்: வீதிக்கு வந்த தீபாவின் குடும்ப பிரச்சினை
x
தினத்தந்தி 12 Jun 2017 3:45 AM IST (Updated: 11 Jun 2017 11:31 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா வீட்டு முன்பு ஜெ.தீபா–மாதவன்–தீபக்–ராஜா இடையே காரசார வாக்குவாதம் நடந்தது. இதன்மூலம் ஜெ.தீபா குடும்ப பிரச்சினை வீதிக்கு வந்தது.

சென்னை,

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்துக்கு ஜெ.தீபா, தனது பேரவை நிர்வாகி ராஜாவுடன் நேற்று காலை வந்தார். அங்கு ஜெயலலிதா படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய சில நிமிடங்களில், அவர் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்டாலும், ஜெயலலிதா வீட்டு வாசலிலேயே ஜெ.தீபா நின்றார். அவரை அங்கிருந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக்கொண்டும், அவர் ஏற்கவில்லை.

அப்போது ஜெ.தீபாவிடம், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த சமயம் ஜெ.தீபாவின் கணவர் மாதவன், தம்பி தீபக் ஆகியோரும் அடுத்தடுத்து வந்தனர். அவர்களிடையே ஏற்பட்ட காரசார வாக்குவாதத்தில், ஜெ.தீபாவின் குடும்ப பிரச்சினை வீதிக்கு வந்தது. மாதவன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பேரவை நிர்வாகி ராஜா அம்பலப்படுத்தி பேசியதும் அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என்ன ஆச்சு?

போயஸ் கார்டனில் ஜெ.தீபா–மாதவன்–தீபக்–ராஜா மற்றும் போலீசார் இடையே நடந்த வாக்குவாதத்தின் விவரம் வருமாறு:–

போலீசார்:– தயவு செய்து சற்று தூரம் சென்று நில்லுங்கள். இங்கே நிற்கக்கூடாது?

ஜெ.தீபா:– இன்னும் சிறிது நேரத்தில் என் கணவர் வருவார்? அதுவரை இங்கு தான் காத்திருப்பேன். நீங்கள் சொல்லும் இடத்தில் நிற்கமுடியாது. புரிகிறதா? உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்.

(மாதவன் வருகிறார்)

மாதவன்:– என்ன ஆச்சு?

ஜெ.தீபா:– என்னையும், ராஜாவையும் தீபக் போயஸ் கார்டனுக்கு வரச்சொன்னான். இப்போ எதுவுமே தெரியாத மாதிரி நடந்துக்கிறான். ராஜா எங்கே? அவனை தனியா விட்டுட கூடாது.

(அப்போது தீபக் காரில் வருகிறார்)

மாதவன் எனது கணவர்

தீபக்:– (மாதவனை பார்த்து) இங்கே பிரச்சினை செய்யவே வந்தாயா? யார் வரச்சொன்னது உங்களை? வெளியே செல்லுங்கள்.

இவ்வாறு கூறிவிட்டு, கதவை பூட்டுமாறு பாதுகாவலர்களிடம் கூறினார்.

ஜெ.தீபா:– டேய் தீபக். என்னடா மாத்தி மாத்தி பேசுற. நீ தானே எங்களை இங்க வரச்சொன்ன. இப்ப அப்படியே மாத்தி பேசுற... அதுமட்டுமில்லாம மாதவன் மேல கை வைக்க பார்க்கிற. என்னடா ஆச்சு உனக்கு?

(ஆனால் எதற்கும் பதில் சொல்லாமல் தீபக் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்)

போலீசார்:– (மாதவனை நோக்கி) ஏய் நீ அங்க போய் நில்லுப்பா...

ஜெ.தீபா:– ஏய் நீ எப்படி மாதவனை வா போ என்று பேசலாம். மாதவன் எனது கணவர். நான் இங்கு தான் நிற்பேன், ஏன் உண்ணாவிரதம் கூட இருப்பேன். உங்களால என்ன செய்யமுடியுமோ செஞ்சுக்கோங்க... முடிஞ்சா கேஸ் போடுங்க... கைது செய்யுங்க... முடியுமா உங்களால?

இங்கிலீஷ் தெரியுமா?

போயஸ் கார்டன் பாதுகாவலர்:– முதலில் எதுக்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்?

ஜெ.தீபா:– நாங்க ஒண்ணும் வரல. அவன்தான் (தீபக்) எங்களை வரச்சொன்னான்.

போலீசார்:– மேடம் எதுக்கு தேவையில்லாம பிரச்சினை செய்யுறீங்க?

ஜெ.தீபா:– (ஆங்கிலத்தில்) நான் பிரச்சினை செய்ய வரலை சார். காலை 5 மணிக்கு எனக்கும், 7 மணிக்கு பேரவை நிர்வாகி ராஜாவுக்கும் தீபக் போன் செய்து போயஸ் கார்டனுக்கு ஜெயலலிதாவுக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக வரச்சொன்னான். நான் மாலை வருகிறேன் என்று சொன்னேன். ஆனால் உடனே வா என்று வற்புறுத்தி கூறினான். அதனால் தான் வந்தோம்.

உங்களுக்கு இங்கிலீஷ் புரியுது தானே? மொழிபெயர்ப்பு செய்யவேண்டிய அவசியம் இல்லையே?

போலீசார்:– உங்களை விட நன்றாகவே எங்களுக்கு இங்கிலீஷ் தெரியும் மேடம். கவலைப்படாதீங்க. நீங்க சொல்ற விளக்கத்தை ஏற்கிறோம். தீபக் சொல்லித்தான் நீங்க இங்க வந்தீங்க... இப்போ அவரே கிளம்பி போய்விட்டாரே? இதுக்குமேல உங்களுக்கு என்ன வேலை? தயவுசெய்து கிளம்புங்க.

ஜெ.தீபா:– முடியாது சார்.

(தீபக் மீண்டும் வருகிறார்)

பொய் சொல்லாத தீபக்

ஜெ.தீபா:– (தீபக்கை பார்த்து) டேய்... என்னடா நடக்குது இங்கே... நீ தானே என்னை இங்கே வரச்சொன்ன. அத மட்டும் முதலில் சொல். நீ போன் பண்ணி கூப்பிட்ட. அதான் நான் வந்தேன். உண்மை தானே... ராஜாவையும் நீதானே கூப்பிட்ட?

தீபக்:– எந்த ராஜா? நான் எப்போ அவனை கூப்பிட்டேன்?

ஜெ.தீபா:– அடேய் பாவி... ராஜா உனக்கு தெரியாது... பொய் சொல்லாத தீபக்... ஏன் இப்படி அநியாயமாக நடந்துக்குற? என்னடா ஆச்சு உனக்கு?

தீபக்:– அக்கா... நான் தெளிவா எல்லாத்தையும் சொல்றேன். இங்கே வேண்டாம். அப்படி வா... உன்னிடம் பேசணும்.

ஜெ.தீபா:– அதெல்லாம் முடியாது. உன்னை எங்கே பார்க்கவேண்டுமோ அங்கே சென்று பார்த்துக்கொள்கிறேன், நீ போ... கண்டிப்பா நீ அழிஞ்சு போயிடுவ.

(மறுபடியும் தீபக் அங்கிருந்து புறப்படுகிறார்)

பொறுமையா இரு

ராஜா:– (ஜெ.தீபாவை பார்த்து) எதுக்கு இங்கே நீ நின்னுக்கிட்டு இருக்க... கிளம்பு... நான் தான் அப்பவே சொன்னேன், வேண்டாம்னு... நீ கேக்கவே இல்லை. தேவையில்லாம என்னோட போன்ல இருந்து அவனுக்கு (தீபக்) எதுக்கு கால் பண்ணி பேசுன? தேவையா உனக்கு?

ஜெ.தீபா:– ராஜா. உன்னை யாருன்னே தெரியாது என்று தீபக் பேசுறான். முதலில் நீ அவனிடம் போய் இதை கேளு.

ராஜா:– நீ முதலில் இங்கு நிற்கவேண்டாம்... வா...

ஜெ.தீபா:– அதெல்லாம் முடியாது. இந்த பிரச்சினை முடியும் வரை நீ இங்கே தான் நிக்கிற, புரியுதா?

(இந்த காட்சிகள் முழுவதையும் மாதவன் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்தார்)

ராஜா:– (மாதவனை நோக்கி ஆவேசமாக) ஏய்.. உனக்கு அறிவு இல்ல. செல்போனை ஆப் செய் டா. அறிவு கிடையாதா?

ஜெ.தீபா:– ராஜா... நீ பண்றது நல்லா இல்ல. பிரச்சினைக்கு காரணமானவனை விட்டுட்டு இங்கே வந்து கத்துறியா? ஏன் இப்படி பண்ற... பொறுமையா இரு...

மரியாதையை காப்பாற்றுங்கள்

துணை கமி‌ஷனர் சரவணன்:– மேடம் இந்த பகுதியில் தேவையில்லாத பிரச்சினைகளை நீங்கள் ஏற்படுத்தினால் சட்டரீதியாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும்.

ஜெ.தீபா:– சார் உங்களை எங்களுக்கு நன்றாகவே தெரியும். என்னை பற்றியும் உங்களுக்கு தெரியும். நாங்கள் பிரச்சினையை ஏற்படுத்தவில்லை. நாங்கள் சொல்வதை முழுதாக கேட்டுவிட்டு நீங்கள் முடிவு எடுங்கள். எங்களை இங்கு கூட்டிட்டு வந்த தீபக்கை விட்டுவிட்டு, எங்களை மிரட்டுவது எந்த வகையில் நியாயம். நாட்டில் உள்ள சட்டத்தை பாருங்கள், இந்த வி‌ஷயத்தை ஏன் இவ்வளவு ஆர்வமாக கவனிக்கிறீர்கள்?

துணை கமி‌ஷனர் சரவணன்:– சட்டம் ஒழுங்கை பார்க்க எங்களுக்கு தெரியும் மேடம். நாங்கள் அதை பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் எங்களிடம் இதுபோல பாயிண்ட் பிடிச்சு பேசாதீங்க. உங்களுக்கு நாங்கள் தரும் மரியாதையை காப்பாற்றி கொள்ளுங்கள்.

ஜெ.தீபா:– ரொம்ப சந்தோ‌ஷம் சார். சூப்பரா பேசுறீங்க...

(அப்போது மீண்டும் தீபக் வருகிறார்)

இப்படி மாறிட்டியே?

ஜெ.தீபா:– வாடா மவனே... இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கேவலம் பிச்சை காசுக்காக நீ இப்படி மாறிட்டியே டா, அசிங்கமா இல்ல உனக்கு? உன்னை நினைக்கும்போது அசிங்கமா இருக்குடா?

தீபக்:– உன்னிடம் தனியாக பேசணும். இங்க இல்ல. நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு... பிளீஸ்.

ஜெ.தீபா:– அது முடியாதுடா போடா... உன் வேலையை நீ போய் பாரு...

(மறுபடியும் தீபக் காரில் புறப்பட்டு செல்கிறார்)

திருட்டு பயலே...

ராஜா:– (ஜெ.தீபாவை பார்த்து) நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு...

மாதவன்:– நீ கவலைப்படாத... அத நான் பார்த்துக்கிறேன். இங்கிருந்து நீ கிளம்பு.

ராஜா:– எனக்கு அட்வைஸ் பண்றியா டா? நாயே, நீயெல்லாம் ஒரு மனு‌ஷனா? காசுக்காக ஓடிப்போனவன் நீ... வீட்டில் உள்ள பணம்–நகையை திருடி ஓடுனவன் நீ... திருட்டு பயலே... எனக்கு நீ அட்வைஸ் பண்றியா டா... ஒழுங்கா இருக்கிற வழிய பாரு.

ஜெ.தீபா:– ராஜா நீ தேவையில்லாம பேசுற... எங்கள் தனிப்பட்ட வி‌ஷயத்துல நீ தலையிடாத... நான் சொன்னா கேப்ப தானே... அமைதியா இரு. என்ன பிரச்சினை நடந்துகிட்டு இருக்கு. நீ என்ன பேசிக்கிட்டு இருக்க?

ராஜா:– தயவுசெய்து உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன்... இங்கிருந்து நாம் போயிடலாம். பிரச்சினை வேறு விதமா போகுது. இது பெரிய குடும்பத்து பிரச்சினை. நாம கேவலப்படுத்த வேண்டாம். நீங்க நிற்பது எங்களுக்கு கஷ்டமா இருக்குமா. வாங்க போயிடுவோம்.

(ஜெ.தீபா அமைதியாக இருக்கிறார்)

‘எல்லாருக்குமே நல்லது’

போலீசார்:– எதுவாக இருந்தாலும் வீட்டில் போய் பேசிக்கொள்ளுங்கள். கொஞ்சம் தள்ளி அவ்ளோ மீடியா இருக்கு. கொஞ்சம் புரிஞ்சுங்கோங்கம்மா. இது சிக்கலான பிரச்சினை. தேவையில்லாத பிரச்சினை நமக்கு எதுக்குமா? கொஞ்சம் நடங்க பிளீஸ்... மீடியாக்கிட்ட போய் பேசுங்க... அப்படியே கிளம்பி வீட்டுக்கு போங்கம்மா... அதுதான் எல்லாருக்குமே நல்லது.

ஜெ.தீபா:– (மாதவன், ராஜாவை பார்த்து) சரி கிளம்புவோம்.

அதனைத்தொடர்ந்து ஜெ.தீபா நிருபர்களுக்கு பேட்டியளித்துவிட்டு, பின்னர் வீட்டுக்கு காரில் புறப்படுகிறார்.


Next Story