சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி அலுவலக வளாகத்தில் தீ விபத்து


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி அலுவலக வளாகத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 12 Jun 2017 2:03 AM IST (Updated: 12 Jun 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை,

தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பல கோடி மதிப்பிலான பாட புத்தகங்கள் தப்பியது.

பள்ளி கல்வி அலுவலகம்

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பள்ளி கல்வித்துறையின் தலைமை அலுவலகம் (டி.பி.ஐ.) செயல்பட்டு வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பரப்பாக காணப்படும் அலுவலகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இந்த அலுவலக வளாகத்தில் ஆங்கிலோ–இந்தியன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் உள்ளது.

இந்த அலுவகத்தின் எதிரே பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பயன்படுத்திய பழுதடைந்த பழைய வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதன் அருகே தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு சொந்தமான பாட புத்தகங்கள் வைக்கும் கிடங்கு உள்ளது.

பாடபுத்தகங்கள்

நேற்று மாலை திடீரென நிறுத்திவைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். எழும்பூர் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயகுமார் தலைமையில் வீரர்கள் விரைந்துவந்து வாகனங்களில் ஏற்பட்ட தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

உடனடியாக தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பல கோடி மதிப்பிலான பாடப் புத்தகங்கள் தப்பியது. இந்த தீ விபத்தில் 12–க்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்கள் எரிந்து நாசமாயின.

இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மரங்களில் இருந்து விழுந்த இலை, தழை குவியல்களில் யாரோ அணைக்காமல் போட்ட சிகரெட்டால் தீப்பிடித்தது தெரியவந்தது.


Next Story