துணைவேந்தர், பதிவாளர் பதவிகளுக்கு எஸ்.சி., எஸ்.டி.க்கு பிரதிநிதித்துவம் கேட்டு வழக்கு
ஐகோர்ட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் 21 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன.
சென்னை,
9 துணைவேந்தர் பதவிகளும், 8 பதிவாளர் பதவிகளும், 10 தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிகளும் காலியாக உள்ளன. இந்த பதவிகளையும், பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட், செனட் உறுப்பினர் பதவிகளையும் நிரப்பும்போதும், எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கோரி கடந்த மார்ச் மாதம் தமிழக உயர் கல்வித்துறை செயலாளருக்கும், பல்கலைக்கழக மானிய குழுவிற்கும் மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, இந்தக் காலிப்பணியிடங்களை நிரப்பும்போது எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்டோருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், மனுவுக்கு தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 17–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.