பணியில் இருந்து ஓய்வு பெற்றார்; நீதிபதி கர்ணனை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று தற்போது தலைமறைவாக இருக்கும் மேற்கு வங்காள மாநில ஐகோர்ட்டு நீதிபதி கர்ணனை கைது செய்ய போலீசார் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை,
இந்தநிலையில் அவர் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
கோர்ட்டு அவமதிப்பு வழக்குநீதிபதி கர்ணன் சென்னை ஐகோர்ட்டில் பதவி வகித்தபோது சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். நீதித்துறையில் ஊழல் நடப்பதாக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15–ந்தேதி கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து நீதிபதி கர்ணன் மீது சுப்ரீம் கோர்ட்டு, அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் பிறகும் நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளுக்கு எதிரான உத்தரவுகளையே தொடர்ந்து பிறப்பித்து வந்தார்.
மனநல பரிசோதனைஇதனால், அவர் மீது அதிருப்தி அடைந்த 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அவருக்கு மனநல பரிசோதனை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மேற்கு வங்காள அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தன் முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று நீதிபதி கர்ணன் பதில் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் நீதிபதி கர்ணன் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததோடு அவரை கைது செய்யும்படி மேற்கு வங்காள மாநில டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.
தலைமறைவுசுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த சமயத்தில் நீதிபதி கர்ணன் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார். அவரை கைது செய்வதற்காக மேற்கு வங்க மாநில டி.ஜி.பி. சுரஜித்கர் புர்கயஷா தலைமையில் தனிப்படை போலீசார் சென்னை வந்தனர்.
ஆனால் தனிப்படை போலீசாரிடம் சிக்காமல் நீதிபதி கர்ணன் தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பது கடந்த ஒரு மாதமாக கண்டறியப்படவில்லை.
மேற்கு வங்க மாநில தனிப்படை போலீசார் தொடர்ந்து சென்னையில் முகாமிட்டுள்ளனர். சென்னை நகர போலீசார் மேற்கு வங்க மாநில தனிப்படை போலீசாருக்கு உதவிகரமாக உள்ளனர். நீதிபதி கர்ணனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அவரது மகன் வீட்டிலும் தனிப்படை போலீசார் சென்று விசாரித்தனர். கர்ணன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஓய்வு பெற்றார்இந்தநிலையில், நீதிபதி கர்ணன் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்யும் பணியில் மேற்கு வங்க மாநில தனிப்படை போலீசார் மீண்டும் தீவிரமாக இறங்கியுள்ளனர். அவர் டெல்லியிலோ, அல்லது கேரளாவிலோ தலைமறைவாக இருக்கலாம் என்ற தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் அவரை கண்காணித்து அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதில் தனிப்படை போலீசார் மும்முரமாக உள்ளனர்.
மேற்கு வங்க மாநில டி.ஜி.பி., தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாகவும் அந்த கடிதத்தில் நீதிபதி கர்ணனை கைது செய்ய உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளதாகவும் நேற்று மாலை தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது.
பழைய கடிதம்இதுபற்றி தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:–
மேற்கு வங்க மாநில டி.ஜி.பி., எனக்கு கடிதம் எழுதியது பழைய சம்பவம். அவர்கள் சென்னைக்கு வந்தபோதே எனக்கு கடிதம் கொடுத்துவிட்டனர். நீதிபதி கர்ணனை கைது செய்வதற்கு தமிழக போலீசார் மேற்கு வங்க மாநில போலீசாருக்கு உதவிகரமாக உள்ளனர்.
சென்னை நகர போலீசின் தனிப்படை, மேற்கு வங்க மாநில போலீசாருக்கு உடன் இருந்து உதவி செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.