உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஐகோர்ட்டு கேள்வி
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு இதுவரை மாநில தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 24–ந்தேதியோடு முடிவடைந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தலை இரு கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.இதில், எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை என்று ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘தி.மு.க. கோரிக்கையை நிராகரித்தார். அதேநேரம், தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை முறையாக பின்பற்றி பிறப்பிக்கவில்லை என்று கூறி தேர்தலை ரத்துசெய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு வருகிற ஜூலை மாதம் 14–ந்தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
தனி அதிகாரிகள்அதேநேரம், நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவின்படி, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த தனி அதிகாரிகளின் பதவி காலம் வருகிற 30–ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், தனி அதிகாரிகளின் பதவி காலத்தை மேலும் நீட்டிக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் மாற்றம் இந்தியா என்ற அமைப்பின் இயக்குனர் நாராயணன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல், ‘கடந்த 8 மாதங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காலத்தை கடத்தி வருகிறது.
நடவடிக்கைகள் என்ன?தேர்தலை நடத்தவேண்டும் என்ற எண்ணம் தேர்தல் ஆணையத்துக்கும், அரசுக்கும் இல்லை. மேலும், தனி அதிகாரிகளை நியமித்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பது என்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது ஆகும்’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வருகிற 30–ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.