தமிழகத்தில் 5 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்


தமிழகத்தில் 5 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2017 10:30 PM GMT (Updated: 13 Jun 2017 7:19 PM GMT)

தமிழகத்தில் 5 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் நேற்று காலையில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்த நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- அம்மா முழு உடல் பரிசோதனை மையம் தற்போது 5 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. வேறு மாவட்டங்களுக்கும் அது விரிவுபடுத்தப்படுமா?

பதில்:- படிப்படியாக எல்லா மாவட்டங்களிலும் முழு உடல் பரிசோதனை மையத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- இந்த மருத்துவமனையில் இந்தத் திட்டத்தால் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்?

பதில்:- இந்த மருத்துவமனையில் மட்டும் 16 ஆயிரத்து 800 பேர் பயனடைந்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை

கேள்வி:- தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தற்போதுள்ள நிலை என்ன? அதை மதுரையில் அமைக்க வேண்டும் என்று பலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதே?

பதில்:- இதுபற்றி நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் 5 இடங்களை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டி இருந்தார்.

அந்தக் கோரிக்கை மத்திய அரசிடம் உள்ளது. அதை மத்திய அரசு பரிசீலித்து, 5 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீட் தேர்வு

அதைத் தொடர்ந்து நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதிலளிப்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தவிர்த்துவிட்டார்.

Next Story