தமிழகத்தில் அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க சிறப்பு திட்டம் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


தமிழகத்தில் அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க சிறப்பு திட்டம் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 14 Jun 2017 7:15 PM GMT (Updated: 14 Jun 2017 6:46 PM GMT)

தமிழகத்தில் அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அழிந்து வரும் பனை மரங்கள்

தமிழர்களின் புனித மரமாக கருதப்படுவதும், தமிழ்நாட்டின் மாநில மரமுமாகிய பனைமரங்கள் வேகமாக அழிந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழர்களின் முக்கிய வாழ்வாதாரமாக திகழ்ந்த, திகழ வேண்டிய பனை மரங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

1970–ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி தமிழகத்தில் சுமார் 6 கோடி பனை மரங்கள் இருந்துள்ளன. கடந்த 2014–ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பனை மரங்களின் எண்ணிக்கை 5 கோடியாக குறைந்திருந்தது. இப்போது இந்த எண்ணிக்கை மேலும் குறைந்திருப்பதாக கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் தெரிவித்திருக்கிறது. 1970–களில் இருந்து 40 ஆண்டுகளில் எவ்வளவு பனை மரங்கள் குறைந்தனவோ, அவற்றில் பாதியளவு மரங்கள் கடந்த 4 ஆண்டுகளில் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், எதற்கும் பயன்படாத பினாமி அரசு, அனைத்துக்கும் பயன்படும் பனை மரங்களை பாதுகாத்து பெருக்குவதில் சிறிதளவு கூட அக்கறை காட்டவில்லை.

சிறப்பு திட்டம்

தமிழகத்தின் மாநில மரமான பனை அழிவதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் அவலமானது. எனவே, பனை மரங்களை பாதுகாப்பதற்கான சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். தமிழகத்திலுள்ள 12 ஆயிரத்து 500 ஊராட்சிகளிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பனை விதைகளை வழங்கி, அவற்றை விதைத்து பாதுகாப்பாக வளர்ப்பதை இயக்கமாக மாற்ற வேண்டும். அத்துடன் பனைமரம் ஏறுவதற்கான எந்திரங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story