காடுகளில் ரூ.3 கோடியில் 60 பண்ணை குட்டைகள் அமைக்கப்படும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு


காடுகளில் ரூ.3 கோடியில் 60 பண்ணை குட்டைகள் அமைக்கப்படும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2017 11:00 PM GMT (Updated: 14 Jun 2017 8:19 PM GMT)

ரூ.3 கோடியில் 60 பண்ணை குட்டைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

சென்னை,

தண்ணீருக்காக விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வருவதை தடுக்க காடுகளில் ரூ.3 கோடியில் 60 பண்ணை குட்டைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

சட்டசபையில் நேற்று வனத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இறுதியாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்து பேசினார். தொடர்ந்து, வனத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு பேசினார். அதன் விவரம் வருமாறு:-

ரூ.3 கோடியில்

60 பண்ணை குட்டைகள்

* கடந்த 2016-ம் ஆண்டில் பருவமழை பொய்த்து வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு வனங்களிலும் நீர்வரத்து இல்லாமல், வனங்கள் காய்ந்து வன உயிரினங்கள் கூட்டாக காட்டை விட்டு வெளியேறி, மனித-வன உயிரினங்கள் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. ஆகவே, மழைநீரினை உரிய முறையில் சேமித்து வைத்து பயன்படுத்துவதற்காகவும், நிலத்தடி நீரினை மேம்படுத்துவதற்காகவும், தாவரங்களுக்கு செறிவூட்டுவதற்கும் பண்ணை குட்டைகள் அமைக்கப்படுவது அவசியம் என்பதை கருத்தில் கொண்டு 2017-2018-ம் ஆண்டில் பண்ணை குட்டை ஒன்று ரூ.5 லட்சம் வீதம், நடப்பாண்டில் 60 பண்ணை குட்டைகள் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படும்.

* தமிழக வனத்துறை பணியாளர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டிற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சி கழகத்தில் ரூ.75 லட்சம் செலவில் உள் விளையாட்டு அரங்கம் ஒன்றும், வைகை அணையில் உள்ள தமிழ்நாடு வனவியல் பயிற்சி கல்லூரியிலும், கோயம்புத்தூரில் உள்ள வன உயர் பயிற்சி கழகத்திலும் தலா ரூ.10 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடங்களும் அமைக்கப்படும்.

ரூ.30 லட்சத்தில் மூலிகை பூங்கா

* 2017-2018-ம் ஆண்டில் மரத்தை வேருடன் பிடுங்கி மாற்றி நடவு செய்யும் கருவிகளை தமிழ்நாட்டு வனத்துறையின் வாயிலாக வாங்குவதற்கு ரூ.1 கோடி செலவிடப்படும்.

* வனக்காப்பாளர் படிநிலையில் இருந்து மாவட்ட வன அலுவலர் படிநிலையில் உள்ள அலுவலர்கள் வரையிலும் உள்ள அலுவலர்களுக்கு 2017-2018, 2018-2019, 2019-2020 மற்றும் 2020-2021 ஆகிய ஆண்டுகளில் முறையே ரூ.2 கோடி, ரூ.4 கோடி, ரூ.6 கோடி மற்றும் ரூ.8 கோடி ஆக மொத்தம் ரூ.20 கோடி செலவில் வனப்பணியாளர் குடியிருப்புக் கட்டிடங்கள் கட்டப்படும்.

* திண்டுக்கல் மலைக்கோட்டை மலையை பசுமை மிக்கதாக மாற்ற அரசு முடிவெடுத்து, கடும் பாறைகளிலும் வளரக்கூடிய அத்தி, அரசு, ஆல், இச்சி, கல் இச்சி உள்ளிட்ட சிறந்த மர வகைகளை சிறப்பு நடவு முறையை பயன்படுத்தி மரம் ஒன்றிற்கு 1000 வீதம் 5 ஆயிரம் மரக்கன்றுகளை ரூ.50 லட்சம் மொத்த திட்ட மதிப்பீட்டில் நடவு செய்யும் திட்டம் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்.

* பழனி மலையில் 50 வகையான மூலிகை மரக்கன்றுகள் 10 ஆயிரம் நட்டு, பெரும் பூங்கா ஒன்று ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்படும்.


Next Story