தீவிர கட்சிப்பணியில் ஈடுபட தினகரன் திட்டம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று முதல்வரை சந்திக்கின்றனர்


தீவிர கட்சிப்பணியில் ஈடுபட தினகரன் திட்டம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று முதல்வரை சந்திக்கின்றனர்
x
தினத்தந்தி 15 Jun 2017 6:09 AM GMT (Updated: 15 Jun 2017 6:09 AM GMT)

கட்சிப்பணியில் தினகரன் தீவிரம் காட்ட திட்டமிட்டு உள்ளார் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கின்றனர்.

சென்னை,

அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டைஇலை சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டுமென்றால் சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணியினர் தொடர்ந்து கூறி வந்தனர். இதனை ஏற்று இருவரையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.இதை ஏற்று தினகரனும் ஒதுங்கி இருப்பதாக கூறினார்.

தினகரன் 34 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் கடந்த 3-ந்தேதி திகார் சிறையில் இருந்த விடுதலை யானார். ஜெயிலில் இருந்து வெளிவந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தினகரன், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளரான சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது. என்னை யாரும் ஒதுக்கி வைக்க முடியாது என்று கூறினார். கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டப் போவதாகவும் கூறினார்.

கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடப் போவதாக அறிவித்ததை அமைச்சர்கள் சிலர் ஏற்கவில்லை.
அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை கட்சியினர் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களோ அணி திரண்டு சென்று தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அமைச்சர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் தினகரனுக்கு எதிராக பேசிய அமைச்சர்கள் அடங்கிப் போனார்கள்.

டிடிவி தினகரனுக்கு 34 எம்.எல்.ஏக்கள் இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளனர். தினகரன் ஆதரவு எம்.பி.க் களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தினகரன் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் சசிகலா அணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அணி, தினகரன் அணி என 2 அணிகளாக அது உடைந்துள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருவதால் தற்போது 3 அணிகளாக அ.தி.மு.க. மாறியுள்ளது. ஆட்சியை எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்வார். கட்சியை தினகரன்தான் வழி நடத்திச் செல்வார் என்று தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்திக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த சந்திப்பு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் இன்று மாலை நடைபெறும் என்று கூறப்படுகிறது. சந்திப்பின் போது  தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தினகரன் கட்சியை பார்த்து கொள்வார் என்றும் ஆட்சியை எடப்பாடி பழனிசாமிபார்த்து கொள்ளவேண்டும் என கோரிக்கை வைப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க தினகரன் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றுப்பயணத்தின் போது மாநாடு போன்று பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் அ.தி.மு.க. அம்மா அணியினர் தயாராகி வருகிறார்கள். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தினகரன் உரையாற்றுகிறார்.

இதன் மூலம் கட்சி பணிகளில் தினகரனை தீவிரமாக ஈடுபட வைப்பதற்கு அவரது ஆதரவாளர்கள் முழு மூச்சாக களமிறங்கி உள்ளனர். தினகரனும் கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் அதிரடி அரசியலில் குதிக்க உள்ளார்.

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரான பின்னர் தினகரன் வெளியூர்களுக்கு சென்று அ.தி.மு.க.வினரை சந்திக்கவில்லை. அவர் பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டத்தை தேனியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்கு முன்னதாக தினகரன் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத் துக்கும் வருகை தர உள்ளார்.


Next Story